பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறும் போது, ஜனாதிபதி மாளிகை, எம்.பி.,க்களை விருந்திற்கு அழைப்பதுண்டு. சமீபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தென் மாநில எம்.பி.,க்கள் 125 பேரை காலை சிற்றுண்டிக்கு அழைத்துள்ளார்.
ஆனால், இந்த விருந்திற்கு தமிழகத்திலிருந்து ஐந்து எம்.பி.,க்கள் மட்டுமே பங்கேற்றனராம். இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது. பார்லி., நடவடிக்கைகள் முடக்கப்பட்டு இருப்பதால் தி.மு.க., – எம்.பி.,க்கள் தங்கள் தொகுதிகளில் உள்ளனர்.
தவிர, ‘நீட்’ எதிர்ப்பு விவகாரத்தில் ஜனாதிபதி தங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்கிற ஆதங்கமும் அவர்களிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ராகுல் பதவி பறிப்பை எதிர்த்து ஜனாதிபதி மாளிகை வரை கண்டன ஊர்வலம் நடத்தும் தினத்தன்று தான் இந்த சிற்றுண்டி அழைப்பு வந்ததாம்.
காலையில் ஜனாதிபதியுடன் விருந்து சாப்பிட்டு விட்டு, பின் ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக சென்றால் நன்றாக இருக்காது என்பதால், காங்., – எம்.பி.,க்கள் இந்த சிற்றுண்டி அழைப்பில் பங்கேற்கவில்லையாம்.
ஆனால் மற்ற கட்சி எம்.பி.,க்கள் இந்த விருந்தில் பங்கேற்றனர்.