தர்பூசணிக்கு இணையாக எங்கும் கொட்டிக் கிடக்கின்றன முலாம்பழங்கள் எனப்படும் கிர்ணி பழங்கள். கிர்ணி பழத்தில் ஜூஸ் மட்டுமல்ல, ஏகப்பட்ட அயிட்டங்கள் தயாரிக்க முடியும். இந்த வார வீக் எண்டை முலாம் பழ ஸ்பெஷலாக குளுகுளுவென கொண்டாடுங்கள்…
முலாம்பழ ஜாம்
தேவையானவை:
முலாம்பழ விழுது, பப்பாளி விழுது – தலா ஒரு கப்
சர்க்கரை – 2 கப்
செய்முறை:
முலாம்பழம் மற்றும் பப்பாளிப் பழத்தின் தோல், விதைகளை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டுத் தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்தெடுக்கவும். அரைத்த விழுதின் அளவுக்குச் சர்க்கரையை எடுத்துக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் அரைத்த விழுது மற்றும் சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கைவிடாமல் கிளறவும். கிளறும்போது கரண்டியை தூக்கிப் பார்த்தால், ஜாம் கரண்டியிலிருந்து வேகமாக விழாமல், மெதுவாக விழும் பதத்தில் இறக்கவும். சுத்தம் செய்து வெயிலில் காய வைத்த கண்ணாடி பாட்டில்களில் ஜாமை சூடாக இருக்கும்போதே நிரப்பவும். ஜாம் ஆறிய பிறகு பாட்டிலை மூடவும். (ஆறிய உடன் ஜாமை பாட்டிலில் ஊற்றினால் ஜாம் இறுகி பாட்டிலில் போட வராது.)
குறிப்பு: ஃபுட் கலர் சேர்க்கத் தேவையில்லை. சிவப்பு நிற பப்பாளியைச் சேர்த்தால் ஜாம் ஆரஞ்சு கலரில் வரும்.
முலாம்பழ ஐஸ்க்ரீம்
தேவையானவை:
முலாம்பழ விழுது – 2 கப்
பால் – 250 மில்லி (காய்ச்சி ஆற வைத்தது)
கண்டென்ஸ்டு மில்க் – 200 கிராம்
பால் பவுடர் – 3 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – கால் டீஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி சிரப் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
முலாம்பழத்தின் தோல், விதைகளை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் முலாம்பழ விழுதுடன் பால், கண்டென்ஸ்டு மில்க், பால் பவுடர், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை பீட்டரால் அடிக்கவும். பிறகு டப்பாவில் ஊற்றி மூடி ஃப்ரீசரில் 6 மணி நேரம் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து மீண்டும் பீட்டரிலோ அல்லது மிக்ஸியிலோ போட்டு அடித்து டப்பாவில் ஊற்றி மூடி 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். நன்றாக செட் ஆனவுடன் மேலே ஸ்ட்ராபெர்ரி சிரப் ஊற்றிப் பரிமாறவும்.
குறிப்பு: இரண்டு முறை ஐஸ்க்ரீமை வெளியே எடுத்து பீட்டரால் அடிப்பதால் ஐஸ்க்ரீம் மிருதுவாகவும், க்ரீமியாகவும் வரும். விரும்பினால் பாதாம், பிஸ்தா பருப்புகளைச் சேர்த்துப் பரிமாறலாம்.
முலாம்பழ பாப்சிகல்
தேவையானவை:
முலாம்பழம், தர்பூசணி
துண்டுகள் – தலா அரை கப்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – 4 டீஸ்பூன்
செய்முறை:
முலாம்பழம் மற்றும் தர்பூசணியின் தோல், விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். முலாம்பழத் துண்டுகளுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். தர்பூசணித் துண்டுகளுடன் மீதமுள்ள எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.
பாப்சிகல் மோல்டின் பாதியளவுக்கு முலாம்பழ விழுதை ஊற்றி ஃப்ரீசரில் 5 மணி நேரம் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து, அதன் மீது தர்பூசணி விழுதை ஊற்றி மோல்டை மூடி மீண்டும் ஃப்ரீசரில் 6 மணி நேரம் வைக்கவும். செட் ஆனவுடன் வெளியே எடுத்து பாப்சிகல் மோல்டுகளை குழாய் தண்ணீரில் சில நிமிடங்கள் காட்டி, பிறகு ஐஸ்க்ரீமை வெளியே எடுத்துச் சுவைக்கலாம்.
முலாம்பழ சாலட்
தேவையானவை:
முலாம்பழம், தர்பூசணி, வெள்ளரிப் பழத் துண்டுகள் – தலா ஒரு கப்
சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன்
உப்பு – கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்
புதினா இலைகள் – 5 (பொடியாக நறுக்கவும் )
தேன் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
கொடுக்கப்பட்ட பழங்களின் தோல் மற்றும் விதைகளை நீக்கவும். மெலன் ஸ்கூப்பரால் (வட்ட வடிவ ஸ்பூன்) பழங்களின் சதைப்பகுதிகளை தோண்டி எடுக்கவும். பரிமாறும்போது தட்டில் சதைப்பகுதிகளின் மேலே சில்லி ஃப்ளேக்ஸை தூவவும். பிறகு உப்பு, எலுமிச்சைச் சாறு, தேன் பரவலாகச் சேர்க்கவும். இறுதியாகப் புதினா இலைகளை மேலே தூவி, ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிர்ந்த பிறகு பரிமாறவும்.
குறிப்பு: மெலன் ஸ்கூப்பர் இல்லாதவர்கள் பழங்களை சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்.