தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் லிக்னைட் எடுக்க ரகசிய டெண்டர்: ஒன்றிய அரசுக்கு அன்புமணி கண்டனம்

திண்டிவனம்: தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங் களில் லிக்னைட் எடுக்க ரகசிய டெண்டர் விடப்பட்டுள்ளதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், அன்னைத் தமிழின் அழகிய சொற்கள் அடங்கிய தமிழ் பெயர் பதாகைகள், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கான தமிழ் பெயர்கள் கொண்ட பதாகைகள் திறப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து பாமக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில் தமிழ் பெயர் பலகைகளை அமைக்க, துண்டறிக்கைகளை அந்தந்த பகுதிகளில் வழங்குவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

பின்னர் பாமக தலைவர் அன்புமணி அளித்த பேட்டி: லிக்னைட் எடுப்பதற்காக ஒன்றிய அரசு கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியிலும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த வடசேரி பகுதியிலும் தமிழக அரசுக்கு தெரிவிக்காமல் டெண்டர் விட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தொழில் துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரியவில்லை. நெய்வேலியில் நிலக்கரி எடுத்ததால் அந்த பகுதியில் நீர்நிலைகள் மாசு, வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்கும், வேளாண்மைக்கும் ஆதரவாக இல்லாமல் என்எல்சி நிர்வாகத்துக்கு கடலூர் கலெக்டர் துணையாக நிற்கிறார். மேலும் விவசாயிகள் கூட்டத்தில் என்எல்சி குறித்து பேசக்கூடாது என தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது  ஏற்றுக்கொள்ள முடியாதது. 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி  அகற்றப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தபடி பார்த்தால் 37 சுங்க சாவடிகளை  எடுத்திருக்க வேண்டும். தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர், நீதிமன்றத்திற்கு  சென்று உடனடியாக 37 சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.