தமிழகம் முழுவதும் 55 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் 29 இடங்களில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் நேற்று (1-ம் தேதி) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. முன்னதாக நடப்பு நிதியாண்டில் இந்தக் கட்டணத்தை 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதன்படி திருத்தப்பட்ட கட்டணம் அமலுக்கு வந்திருக்கிறது.
அதாவது சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில், கார்களுக்கு ரூ.60-லிருந்து ரூ.70-ஆகவும், இலகுரக வாகனங்களுக்கு ரூ.105-லிருந்து ரூ.115, லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205-லிருந்து ரூ.240, மூன்று அச்சு (ஆக்ஸில்) வாகனங்களுக்கு ரூ.225-லிருந்து ரூ.260 அதிகரித்திருக்கிறது.
கடும் எதிர்ப்பு:
இதேபோல் நான்கு முதல் ஆறு அச்சு வாகனங்களுக்கு ரூ.325-லிருந்து ரூ.375, ஏழு அச்சு மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ரூ.395-லிருந்து ரூ.455-ஆக சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், வாடகை வாகனங்களை இயக்குவோர், பொதுமக்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆங்காங்கே போராட்டமும் நடந்து வருகிறது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரத்த நாளங்களாக விளங்குவது சாலைப் போக்குவரத்தாகும். வாகனங்கள் பெருகி வரும் எண்ணிக்கைக்குத் தக்கபடி சாலைகள் அமைப்பது, விரிவுபடுத்துவது, மேம்பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் மேம்படுத்துவது என அத்தியாவசியப் பணிகளை பா.ஜ.க ஒன்றிய அரசு கைகழுவிவிட்டது.
“கூடுதலாக ரூ.60 வரை…”
இன்று முதல் சுங்கச்சாவடிகள் வழியாகச் செல்லும் வாகனங்கள் வழக்கமாகச் செலுத்தும் கட்டணத்தோடு கூடுதலாக ரூ.60 வரை செலுத்த வேண்டும். பாஸ்ட் டாக் என்ற முறையில் முன்கட்டணம் செலுத்தும் முறைக்குச் செல்லாத வாகனங்கள் இரட்டிப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு வாகன உரிமைதாரர்களும், பயனாளிகளும் ஆளாகியிருக்கின்றனர். பல சுங்கச்சாவடிகள் சட்டவிரோதமாக இயங்கி வருவதாக புகார்களும் எழுந்திருக்கின்றன.
“சுதந்திரமாகப் பயணிக்க…”
சேவைச் சாலைகள் அமைக்காமலும், தரமான சாலைகள் அமைக்காமலும் ஊழலில் ஊறிப்போன அதிகார வர்க்கமும், தனியார் நிறுவனங்களும் கூட்டாக மக்களின் தலையில் சுமை ஏற்றுவதை வேடிக்கை பார்த்து வரும் பா.ஜ.க அரசுக்கு கண்டனத்தை தெரிவித்திக்கொள்கிறேன். மேலும் சுங்கச்சாவடிகளை நீக்கி, மக்கள் சுதந்திரமாகப் பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து நம்மிடம் பேசிய சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ, “வாடகை கார் தொழில் ஏற்கெனவே நலிவடைந்திருக்கிறது. 2013-ம் ஆண்டு 7 பேர் செல்லக்கூடிய வாகனத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.13 வசூல் செய்து வந்தோம். அப்போது ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.62 ஆக இருந்தது.
“பயணிகளுக்குப் பாதிப்பு…”
நடப்பு 2023-ல் 10 ஆண்டுகள் கழித்து ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.16 வசூல் செய்து வருகிறோம். இப்போது ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.96-ஆக இருக்கிறது. இந்த நிலையில்தான், சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. நாங்கள் சுங்கக்கட்டணத்தை பயணிகளிடமிருந்துதான் பெற்றுத் தருவோம்.
இதனால் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அப்போது வாடகை வாகனங்களைப் பயன்படுத்துவதை மக்கள் பெருமளவில் தவிர்க்கக் கூடும். எனவே இவ்வாறு ஆண்டு தோறும் கட்டணம் உயர்வதை தடுக்க மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். சலுகை விலையில் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
“கடுகு விலையும் உயரும்…”
இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, “சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது மத்திய அரசைப் பொறுத்த வரையில், சாலை மேம்பாட்டுக்காக என்று அறிவித்துவிட்டார்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மேம்பாலம் இருக்கும் பகுதிகள், சுரங்கப்பாதை இருக்கும் பகுதிகள் ஆகிய இடங்களில் மட்டும் சுங்கச்சாவடி வேண்டும் என்று அறிவித்தார்கள்.
ஆனால், இன்று அது பெரிய தொழில்கூடமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தக் கட்டண உயர்வு சாதாரணக் கூலித்தொழிலாளி வாங்கும் 50 கிராம் கடுகின் விலையும் உயரும். இதனால் காய், பழங்கள், மளிகைப் பொருள்கள் வரை அனைத்திலும் கட்டணம் உயரும். பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
“60 கி.மீ-க்கு உட்பட்ட…”
தமிழகத்தில் காலாவதியான டோல் கேட்டுகள், 60 கி.மீ-க்கு உட்பட்ட டோல் கேட்டுகள் அகற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. சென்னை அருகிலேயே எத்தனை இருக்கின்றன என்பதை நாம் அறிந்திருப்போம். இதுபோன்ற இடர்பாடுகளை மத்திய அரசு களைய வேண்டும்” என்றார்.
இதற்கிடையில் இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, “சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை மத்திய அரசிடம் கோரிக்கையாக தொடர்ந்து வைத்து வருகிறோம்.
“நியாமில்லை…”
மத்திய அரசோ ‘சட்ட விதிப்படிதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, ஒப்பந்ததாரருக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை அரசு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால் சுங்க வரி வசூலிக்கப்படும்’ என்னும் விளக்கத்தை அளிக்கிறது. ஆனால், பல இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டதற்கான முழு தொகை செலுத்திவிட்ட பின்பும், வசூல் செய்வது நியாமில்லை என்பதை வலியுறுத்தியிருக்கிறோம்.
கடந்த மாதம் 18-ம் தேதி கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், `நாங்கள், போடப்பட்ட ஒப்பந்தத்தின்படிதான் வசூலிக்கிறோம்’ என்கிறார்கள். ஆகவே, முழுமையாக சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்பதே எங்கள் அரசின் நிலைப்பாடு. ஆனால், அதையும்மீறி பராமரிப்பு தொகை வசூலித்தால், அது 40% குறைவான கட்டணமாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறோம்” என்றார்.