திருமலை: திருப்பதியில் தம்பியின் தகாத உறவால் நள்ளிரவு சாப்ட்வேர் இன்ஜினியர் காருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி அடுத்த கங்குடுப்பள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கார் எரிந்து கொண்டிருந்தது. இதில் ஒரு வாலிபர் கருகி பலியாகி இருப்பதை பார்த்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சந்திரகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில், உயிரிழந்தது. பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த, சித்தூர் மாவட்டத்தில் உள்ள வெதுருகுப்பம் அடுத்த பிராமணப்பள்னே கிராமத்தை சேர்ந்த நாகராஜ்(33) என்பது தெரியவந்தது.
இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை, 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட நாகாராஜின் தம்பியான புருஷோத்தமனுக்கும், அதேபகுதியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சாணிக்கிய பிரசாத் என்பவரது தம்பி ரூபஞ்ஜெயாவின் மனைவிக்கும் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பேச நாகராஜை, சாணிக்கிய பிரசாத், ரூபஞ்ஜெயா, கோபி, சுப்பு ஆகியோர் அழைத்துள்ளனர். இதை நம்பி சென்ற நாகராஜை தாக்கி காரில் வைத்து பெட்ரோல் ஊற்றி கொலை செய்துவிட்டு தப்பி உள்ளனர். தொடர்ந்து 4 பேரையும் தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.