திருமலை: திருப்பதியில் இருந்து திருமலைக்கு நேர்த்தி கடனாக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு மார்க்கங்கள் வாயிலாக தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நடந்தே மலையேறி சென்று ஏழுமலையானை தரிசிப்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையாகும்.
சில ஆண்டுகளாக இவ்விரு பாதைகளில் செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. மேலும், இரண்டு லட்டு பிரசாதங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. கரோனா தொற்றின் போது திவ்ய தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இது நேற்று முதல் மீண்டும்தொடங்கப்பட்டது. அலிபிரி வழியாக செல்லும் பக்தர்களுக்கு தினமும் 10 ஆயிரம் டோக்கன் களும், ஸ்ரீவாரி மெட்டு மார்க்கமாக செல்லும் பக்தர்களுக்கு தினமும் 5 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்பட்டன. அலிபிரி பாதையில் காலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும், ஸ்ரீவாரி மெட்டு பாதையில் காலை 6 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையிலும் திவ்ய தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். யாருடைய சிபாரிசும் இன்றி சுவாமிக்கு நேர்த்தி கடன் செலுத்துவதோடு தரிசனமும் செய்து விடலாம் என பக்தர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ. 120.29 கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த 2022 மார்ச் மாதம் முதல் இந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தொடர்ந்து மாதம் உண்டியல் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வருகிறது.
2022-23 நிதி ஆண்டில் ரூ.1,520.29 கோடி உண்டியல் மூலமாக காணிக்கை கிடைத்துள்ளது. இது 2023-24 நிதி ஆண்டில் ரூ.1,700 கோடியாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.