கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் இருந்து 14 பயணிகளுடன் கோவைக்கு நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் ஆம்னி பஸ் புறப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் அகிலன்(45) ஓட்டி சென்றார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நள்ளிரவு 12.45 மணியளவில் பஸ் வந்தபோது, திடீரென பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தி இறங்கி பார்த்தார். அப்போது பஸ்சின் பின்புறம் லேசாக தீப்பற்றியிருந்தது தெரிந்தது. இதையடுத்து அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பயணிகளை எழுப்பி கீழே இறக்கினார்.
அடுத்த சில நிமிடங்களில் பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் வந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். டிரைவர் துரிதமாக செயல்பட்டதால் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் கோவில்பட்டி – மதுரை நான்குவழிச் சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எளிதில் வெடிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் பஸ்சில் இருந்ததா அல்லது சாலையில் கிடந்த மர்ம பொருள் வெடித்து பஸ்சில் தீப்பிடித்ததா என சாத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.