சேலம்: பயிர்க்கடனை கால அவகாசத்திற்குள் செலுத்திய விவசாயிகளின் பயிர்கடன் வட்டி ரத்து செய்யப்பட்டு, அதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.350 கோடியை அரசு விடுவித்துள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகின்றன. கடன் பெற்ற தேதியில் இருந்து, குறித்த காலத்திற்குள் கடனை முழுதும் செலுத்துவோருக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள், தங்களின் தேவைக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
கூட்டுறவு சங்கங்களில் சேர்ந்துள்ள புதிய உறுப்பினர்களுக்கு அதிகளவில் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டு 2023 மார்ச் வரை ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேல் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2022 நிதியாண்டில் ரூ.10 ஆயிரத்து 292 கோடி பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனிடையே, பயிர்க்கடனை கால அவகாசத்திற்குள் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதற்காக, கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்படும் செலவை ஈடு செய்ய, தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதன்படி, பயிர்க்கடன் வட்டி தள்ளுபடிக்காக, இந்த நிதியாண்டிற்கு ரூ.350 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியை மாநில தலைமை கூட்டுறவு வங்கி, சென்னையை தவிர்த்த மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களுக்கும் பகிர்ந்து அளிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.