நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் ஏ.எஸ்.பி-யாகப் பணியாற்றிய பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய குற்றச்சாட்டு காரணமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவர்மீதான புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து விளக்கிவருகிறார்கள்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துப் பேசிய சவுக்கு சங்கர், “இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது. அதனால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர முடியும்” எனத் தெரிவித்தார்.
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மட்டன் ஸ்டால் நடத்திவரும் சகோதர்கள், அவர்களின் நண்பர்களை ஒரு கும்பல் அரிவாளுடன் வெட்ட வந்திருக்கிறது. அந்தக் கும்பலை விரட்டிப் பிடித்ததற்காக அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பற்களைப் பிடுங்கியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர்கள் ஐந்து பேரும் ஏற்கெனவே மனித உரிமைகள் ஆணையத்திடமும், சப்-கலெக்டரிடம் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இந்த நிலையில், ஏ.டி.எஸ்.பி-யால் பற்களைப் பிடுங்கப்பட்டவர்களில் மாரியப்பன் என்பவரின் பிறப்புறுப்பைப் பிடித்து நசுக்கியதால் நடக்க முடியாமலும், உணவுகூட எடுத்துக்கொள்ள முடியாமலும் தவித்துவந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய கல்லீரலிலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட மாரியப்பன் பேசுகையில், “எங்களை வெட்ட வந்த கும்பல் ஓர் இடத்தில் பதுங்கியிருப்பதை அறிந்ததும் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, அவர்களைப் பிடித்துக் கொடுத்தோம். அப்போது அங்கு வந்த எஸ்.ஐ முருகேசன் என்பவர் எங்களை அடித்ததோடு, `எங்க வேலையைச் செய்ய நீங்க யார்?’ என்று கேட்டதுடன், ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கிடம் எங்களைப் பற்றி ஏதோ தவறாகச் சொல்லிவிட்டார்.

அதனால் ஸ்டேஷனுக்கு வந்ததும் எங்களை மாடியிலுள்ள அறைக்கு அழைத்துச் சென்று பற்களைப் பிடுங்கினார். எனக்குத் திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகிறது என்று என் தம்பி சொன்னதும், என் உயிர்த்தடத்தைப் பிடித்து அழுத்தினார். விடாமல் மூன்று நிமிடங்கள் அழுத்தியதால் வலியால் கதறினேன். அதன் பிறகு மூச்சுவிட முடியாமல் துடித்த என்னை பூட்ஸ் காலால் முதுகில் மிதித்தார். லத்தியால் என் விலா எலும்பில் குத்தினார்.
அதன் பிறகு ஜாமீனில் கையெழுத்திட தினமும் ஸ்டேஷனுக்குப் போக வேண்டியதிருந்ததால் மருத்துவமனைக்குப் போகாமல் வீட்டிலேயே சுருண்டு படுத்துக் கிடந்தேன். வலி அதிகமானதால் நேற்று (ஏப்ரல் 1-ம் தேதி) அரசு மருத்துவமனைக்கு வந்தேன். இங்கே எனக்கு நல்ல முறையில் சிகிச்சை கொடுத்தார்கள். அதற்குள் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வந்து என்னிடம் விசாரித்து விட்டுப் போனார். நடந்த விவரங்களைச் சொன்னேன். அதன் பிறகு மருத்துவர்கள் எனக்கு சரிவர மருத்துவம் செய்யவில்லை.

என் கல்லீரலில் நீர்க்கட்டி இருப்பதாக சொன்ன மருத்துவர்கள், அதை டியூப் போட்டு எடுக்க வெளியிலிருந்து டியூப் வாங்கி வரச் சொல்லியிருந்தார்கள். அதை வாங்கிக் கொடுத்திருந்தோம். ஆனால் அவர்கள், மருத்துவர்களிடமும் பேசிவிட்டுச் செல்வதால் எனக்கு சரிவர சிகிச்சை கிடைக்கவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் தனியார் மருத்துவமனைக்காவது சென்று சிகிச்சை எடுக்க திட்டமிட்டிருக்கிறேன்” என்றார் கண்ணீர் மல்க.