சென்னை: பாஜக தொடக்க நாளான ஏப்ரல் 6 முதல் 14 வரை சமூக நீதி வாரமாக கடைபிடித்து, பாஜகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி பாஜக தொடங்கப்பட்ட நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜகவின் தொடக்க நாளான வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஒரு வாரம் சமூக நீதி நாளாக கடை பிடித்து பாஜகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணா மலை, அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், இது தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்த மாநில அளவிலான குழுவையும் நியமித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாவது:
கட்சியின் கொள்கை, கோட்பாடு: நமது கட்சியின் தொடக்கம், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள், கட்சியின் வரலாறு, வளர்ச்சி மற்றும் இயக்கத்தை வென்றெடுத்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, நல்லாட்சியில் வழங்கிய சாதனைகள் ஆகியவை நமது தொண்டர்களை மட்டுமின்றி, மக்களையும் சென்றடையும் வகையில் நிகழ்ச்சிகளை கிளை அளவில் நடத்திட வேண்டும்.
சமூக நீதி வாரம்: அந்தவகையில், கட்சியின் தொடக்க நாளான ஏப்ரல் 6-ம் தேதி முதல் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14-ம் தேதி வரை சமூக நீதி வாரமாக கடைபிடித்து பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் மாவட்ட, மண்டல, கிளை அளவில் நடத்தப்பட்ட உள்ளது.
இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் தலைமையில், மாநில செயலாளர்கள், மலர்கொடி, கே.வெங்கடேசன், ஏ.அஸ்வத்தாமன், ஓபிசி பிரிவு மாநில தலைவர் ஆர்.எம்.சாய் சுரேஷ், எஸ்சி பிரிவு மாநில தலைவர் தடா பெரியசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் என்.பி.பழனிசாமி உட்பட 10 பேர் கொண்ட மாநில அளவிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.