தமிழகத்தில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்புள்ளது என அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருமான பி.சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சஞ்சய், “தமிழகத்தில் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில், 10 பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவை. இந்நிலையில் மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை, மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால்புரம் பிரம்பு வேலைப்பாடுகள், மார்த்தாண்டம் தேன், கம்பம் பன்னீர் திராட்சை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வெவ்வேறு காலகட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்டன.
புவிசார் குறியீடுக்கு விண்ணப்பித்து 4 மாதங்களுக்குள் பொதுமக்கள் கருத்து கேட்கப்படும். அந்த பொருளுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாத பட்சத்தில் அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும். மேற்கூறிய 11 பொருட்களும் புவிசார் குறியீடு பெறுவதற்காக அரசிதழில் வெளியிடப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் 15-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்துள்ளது. அந்த பொருட்களுக்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும். புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம் அந்த பொருள் தனி தன்மை பெறுகிறது. வெளிநாடுகளுக்கும் எளிதாக ஏற்றுமதி செய்யலாம். பொருட்களை தயாரிப்பவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக பார்க்கப்படுவர்.
மேல் குறிப்பிட்டுள்ள 11 பொருட்களையும் சேர்த்து தமிழ்நாட்டில் மட்டும் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே புவிசார் குறியீடு அதிக அளவில் பெற்றுள்ள மாநிலமாக முதல் இடத்தில் தமிழ்நாட்டில் உள்ளது. இரண்டாம் இடத்தில் கர்நாடகம், மூன்றாவது இடத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளது” என தெரிவித்தார்.