ராமநாதபுரம்: இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மண்டபம் மீனவர்கள் படகு சேதமடைந்தது. படகில் இருந்த மீனவரை தாக்கி, மீன்களையும் அள்ளிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகத்தில் இருந்து 315 விசைப்படகுகள் நேற்று முன்தினம் காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. நள்ளிரவு மண்டபம் அஜ்மல் விசைப்படகில் இருந்த படகோட்டி புல்லாணி, மீனவர்கள் மனோகரன், மலைக்கண்ணன், வெள்ளைச்சாமி ஆகியோர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இலங்கை கடற்படை ரோந்து கப்பலில் வந்த 5 பேர், அஜ்மல் விசைப்படகின் முகப்பில் மோதினர். இதில் படகின் பலகை சேதமானது.
இதனால், அச்சத்தில் இருந்த மீனவர் மனோகரனின் தலையில் சிறு கட்டையால் இலங்கை கடற்படையினர் தாக்கினர். மீனவர்கள் படகில் வைத்திருந்த 30 கிலோ இறால், 25 கிலோ நண்டு, மீனவர் மனோகரனிடம் இருந்த ரூ.1,350 ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதுகுறித்த தகவல்படி, சக மீனவர்கள் அஜ்மல் படகை கயிறு கட்டி இழுத்து கரை சேர்த்தனர். இது குறித்து கடலோர அமலாக்கப் பிரிவு போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகள், மத்திய உளவு படையினர் விசாரித்து வருகின்றனர்.