மதுபான ஊழல் வழக்கில் பஞ்சாப் முதல்வருக்கும் தொடர்பு: பாஜ குற்றச்சாட்டு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்  ஷெஹ்சாத் பூனவல்லா குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பிய கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கெஜ்ரிவால், பிரதமரின் கல்வித் தகுதி குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி, பாஜ இடையயான பனிப்போர் நீடித்து வரும் நிலையில் இதுகுறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறியதாவது, “டெல்லி மதுபான கொள்கை முறைகேடு சிசோடியாவுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. புதிய மதுபான கொள்கையை உருவாக்கிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தான் ஊழலின் முக்கியப்புள்ளி. மேலும், மதுபான மொத்த விற்பனையாளர் ஒருவர் பஞ்சாப் மாநில கலால்துறை மூலம் டெல்லியில் மதுபான விற்பனைக்கான உரிமத்தை பெற முயன்றுள்ளார்.

அதற்கு காரணம் பஞ்சாப்பிலும் அவர் மதுபான விற்பனை செய்யும் எண்ணத்தில் இருந்துள்ளார். இந்த ஊழல் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கும் தொடர்பு இருக்கிறது. சிசோடியா ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதையும், இந்த ஊழல் தனிநபருடன் தொடர்புடையதல்ல.. கூட்டாக செய்யப்பட்டது, இந்த வழக்கில் ஆம் ஆத்மி அரசின் தலையீடு இருப்பதால் விசாரணை பாதிக்கப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை மறுத்து விட முடியாது” என்று தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.