மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் வாகன நிறுத்துமிட கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து சித்திரைத் திருவிழாவுக்குள் திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு வழிபடவும், வேண்டுதல் நிறைவேற்றவும் பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள சுந்தர ராஜ பெருமாள், 18-ம் படி கருப்பண சுவாமி கோயில், மலையிலுள்ள சோலை மலை முருகன் கோயில், நூபுரகங்கை தீர்த்தம், ராக்காயி அம்மன் கோயிலுக்கு தரிசிக்க வருகின்றனர். மேலும் மலை மற்றும் மலை சார்ந்த இயற்கை காட்சிகளை ரசிக்கவும் வருகின்றனர்.
இங்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் மலையடிவாரத்திலுள்ள தேரோடும் வீதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் 4 ஏக்கர் பரப்பளவில் புதிதாக வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குளியலறை ஆகியவற்றை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 2 ஏக்கர் பரப்புடைய பெரியாழ்வார் சிறுவர் பூங்கா புனரமைப்பு பணிகள், விளையாட்டு உபகரணங்கள், வண்ண விளக்குடன் செயற்கை நீரூற்றுகள், புல் தரை பணிகள் ஆகியவையும் நடைபெற்று வருகின்றன.
கோயில் குளத்தின் அருகிலும், பள்ளி நுழைவு பகுதியிலும் பூச்செடிகள், புல்வெளிகள் அமைத்தல் என ரூ.1.5 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மலைப் பாதையில் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மே 5ம் தேதி சித்திரை பவுர்ணமியன்றி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதற்குள் 4 ஏக்கர் வாகன நிறுத்துமிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கள்ளழகர் கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி கூறுகையில், “அழகர்கோவில் வளாகத்தில் ரூ.1.5 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 4 ஏக்கர் பரப்பளவில் புதிய வாகன நிறுத்துமிடம், கழிப்பறைகள், குளியலறைகள் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இவை தமிழக அரசு சார்பில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்” என்றார்.