ஹூக்ளி: மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் ஒருமுறை வன்முறை நிகழ்ந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் இன்று (02/03/2023) ராம நவமியை முன்னிட்டு பாஜக சார்பில் நடந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது.
பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் இன்று நடந்த ராம நவமி ஷோபா ஊர்வலத்தில் பங்கேற்றார். ஊர்வலத்தின் இடையே, கல் எறியப்பட்டது. தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் பாஜக எம்எல்ஏ ஒருவர் காயமடைந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காயம் அடைந்த எம்எல்ஏ பிமன் கோஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வன்முறை சம்பவங்களை அடுத்து அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்தப் பகுதியில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ள அதே வேளையில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதற்கும் மேற்குவங்க மாநில காவல்துறை தடை விதித்துள்ளது.
வன்முறைக்கு காரணமானவர்கள் மீது இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அம்மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார். “குற்றவாளிகள் இரவே ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் நிறுத்தப்படுவார்கள்” என்று ஆளுநர் போஸ் கூறினார்.
அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் இந்த வன்முறையின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளோதோடு, “வன்முறைக்கான காரணம் எளிமையானது மற்றும் தெளிவானது. மம்தா பானர்ஜி இந்துக்களை வெறுக்கிறார்” என்று தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, ராமநவமியை முன்னிட்டு ஹவுரா மாநகரில் கடந்த வியாழன் மாலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, காசிபரா என்ற இடத்தில் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக வேறொரு பிரிவினர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அதோடு, அங்கிருந்த கடைகளையும் சூறையாடினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவத்தின்போது காவல்துறை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
இதையடுத்து, கலவரக்காரர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு அமைதி திரும்பிய நிலையில், ஷிப்பூர் பகுதியில் மறுநாள் (வெள்ளிக்கிழமை) மீண்டும் மோதல் ஏற்பட்டது. கலவரத்திற்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியிருந்தது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததோடு , ”ஊர்வலங்கள் நடத்தும்போது பாஜக பதற்றத்தை உண்டுபண்ணுகிறது. மதக் கலவரத்தை ஏற்படுத்துவதற்காகவே வெளியில் இருந்து குண்டர்களை அக்கட்சி அழைத்து வருகிறது. ஒரு சமூகத்திற்கு எதிராக ஏன் தவறான வழியில் தாக்குதல்களை தொடுக்க வேண்டும்?தாங்கள் தாக்கப்படுவதாக உணர்ந்தால் அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் ஒருநாள் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.