ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தரிசனம் செய்தார்.
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி 50-வது ஆண்டு பொன் விழா மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி 60-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று முன்தினம் இரவு ராஜபாளையம் வந்தார். நேற்று காலை ராஜபாளையத்தில் உள்ள சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தனது மனைவி லட்சுமி ரவியுடன் சென்று தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரிய பெருமாள், நரசிம்மர், பெரியாழ்வார் சந்நிதிகளில் ஆளுநர் சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஆண்டாள் ரெங்க மன்னார் படம், ஆண்டாள் சிலை, கோபுரம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், கோயில் அறங்காவலர் ரவிச்சந்திரன், அறநிலையதுறை துணை ஆணையர் வளர்மதி, செயல் அலுவலர் முத்துராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.