ஹரியாணாவில் 65 வயதான ஆண்கள் மற்றும் 60 வயதான பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் பாதிக் கட்டண சலுகை கடந்த 2017-ல் அமலுக்கு வந்தது. பிறகு 60 வயதான ஆண்களுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் இந்த சலுகை அனுமதிக்கப்பட்டது. ஆதார் அட்டையை காண்பித்து முதியோர் இந்த சலுகையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநில மக்களும் இந்த சலுகையை அனுபவித்து வந்தனர். அவர்கள் காண்பிக்கும் ஆதார் அட்டைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் வெளிமாநில மக்கள் இந்த சலுகையை பயன்படுத்த ஹரியாணா அரசு தடை விதித்துள்ளது. முதியோரின் ஆதார் அட்டையில் ஹரியாணா முகவரி இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஹரியாணாவில் வசிக்கும் முதியோர், மாநில போக்குவரத்துக் கழக இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். விசாரணைக்கு பிறகு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இதை காண்பித்து அரசுப் பேருந்துகளில் கட்டண சலுகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கையை கணக்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.