சண்டிகர்: கடந்த 1988-ம் ஆண்டு பஞ்சாபின் பாட்டியாலாவில் வாகனம் நிறுத்துமிடத்தில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், 65 வயதான குர்னாம் சிங்குக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சித்து தாக்கியதில் குர்னாம் சிங் உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 19-ம் தேதி சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. தீர்ப்பு வெளியான அடுத்த நாள் அவர் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். பத்து மாதங்கள் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து சித்துவின் வழக்கறிஞர் வர்மா கூறும்போது, “உச்ச நீதிமன்றம் விதித்த ஓராண்டு தண்டனையின்படி மே மாதம்தான் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். எனினும் நன்னடத்தை, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் ஓய்வெடுக்காமல் சிறையில் பணியாற்றியது ஆகிய காரணங் களால் முன்கூட்டியே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.