சண்டிகர், கொலை வழக்கில், ஓராண்டு சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, 10 மாத சிறைவாசத்திற்குப் பின் நேற்று விடுதலை ஆனார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, 1988-ல் கொலை வழக்கில் சிக்கினார்.
சாலையில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், குர்ணாம் சிங் என்பவரை அவர் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த குர்ணாம் சிங் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, பஞ்சாப் உயர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நவ்ஜோத் சிங் சித்து மேல் முறையீடு செய்தார். பல ஆண்டுகளாக விசாரணை நடந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று, 10 மாத சிறைவாசத்திற்குப் பின், பாட்டியாலா சிறையில் இருந்து, நவ்ஜோத் சிங் சித்து விடுதலை ஆனார். நன்னடத்தை விதிகள் காரணமாக, தண்டனைக் காலத்திற்கு முன்னதாகவே அவர் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
சிறைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு நவ்ஜோத் சிங் சித்து அளித்த பேட்டி:
பஞ்சாபில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சதி நடக்கிறது. மேலும், பஞ்சாபை பலவீனப்படுத்தவும் முயற்சி நடக்கிறது. ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு நான் மிகப்பெரிய பக்கபலமாக இருப்பேன். பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆம் ஆத்மியின் பகவந்த் மான் முதல்வர் ஆகி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.