சூரத்: அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப். 3) மேல்முறையீடு செய்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி(52) பிரச்சாரம் செய்தார். அப்போது, ‘மோடி’ என்று பெயர் உள்ளவர்கள் குறித்து அவர் விமர்சித்தார்.
வங்கிக் கடன் மோசடியில் வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, ஐபிஎல் கிரிக்கெட் மோசடி புகாரில் சிக்கி, வெளிநாடு தப்பிய லலித் மோடி என்று குற்றம் செய்தவர்கள் பெயர்கள் எல்லாம் ‘மோடி’ என்றே முடிகிறதுஎன்று ராகுல் பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி பெயரையும் அவர் குறிப்பிட்டார். அது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி இழிவுபடுத்திவிட்டதாகப் புகார்கள் எழுந்தன. ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். ராகுல் மீது வழக்குத் தொடுப்பேன் என்று லண்டனில் உள்ள லலித் மோடி தெரிவித்தார்.
சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக விசாரணையில் இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார்.
இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500-வது பிரிவுகளின் கீழ் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. எனினும், உடனடியாக ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீனும் அளித்தது. அத்துடன், மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அடுத்த நாள் (மார்ச்24) ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என பலரும் பாஜகவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸார் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தினர்.
இரண்டு ஆண்டு சிறை தண்டனை அறிவிப்பு, பதவி இழப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ‘‘நான் சாவர்க்கர் அல்ல; மன்னிப்புக் கேட்பதற்கு. நான் ராகுல் காந்தி’’ என்று கூறினார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சாவர்க்கரை ஒப்பிட்டுப் பேசியதற்கு பாஜகவினரும், சிவசேனா (உத்தவ்) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையில், எம்.பி. பதவி இழப்பால் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த சூழ்நிலையில், 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும்போது, நீதிமன்றத்துக்கு ராகுல் காந்தி வருவார்என்று அவரது சட்ட ஆலோசனைக் குழுவினர் நேற்று தெரிவித்தனர்.