4 ஆண்டுகளில் காய்ப்பு வந்து விடும் எலும்பிச்சை சாகுபடியில் இரட்டிப்பு லாபம்: கடவூர், தோகைமலை பகுதியில் விவசாயிகள் ஆர்வம்

தோகைமலை: 4 ஆண்டுகளில் காய்ப்பு வந்து விடும், இரட்டிப்பு லாபம் கிடைப்பதால், கடவூர், தோகைமலை பகுதியில் எலும்பிச்சை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழர்கள் மத்தியில் திருமணங்கள்,மங்கள நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் மருத்துவ குணங்கள், குளிர்பானங்கள் என்று தொன்று தொட்டு எலுமிச்சை பழங்களை பயன்படுத்தி வருவதால் இன்று தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. இதனால் பொதுமக்களின் தினந்தோறும் பயன்படுத்தி வருவதால் இதன் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், எலும்பிச்சை சாகுபடியில் கூடுதல் லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் கூறியதாவது,

எழுமிச்சை சாகுபடியில் அதிக மகசூலை தரும் வீரிய ஒட்டு ரகங்கள் இல்லை. இதனால் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்ட ரகங்களை மட்டுமே பயிரிடப்பட்டு வருகின்றனர். இதில் பி.கே.எம் 1, சாய்சர்பதி, பிரமாலினி, விக்ரம், தெனாலி ஆகிய ரகங்களில் உள்ளது. மஞ்சளாகவும் உருண்டையாகவும் இருப்பது சாதாரண எலுமிச்சை அல்லது செடி எலுமிச்சை என்று அழைக்கப்படுகிறது. இதேபோல் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் சற்றுப் பெரிதாக இருப்பது செடி எலுமிச்சை அல்லது லெமன் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் சமவெளியில் பயிரிடுவதற்கு சாதாரணச் செடி எலுமிச்சையே ஏற்றது. இதேபோல் ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவு செய்வதற்கு ஏற்ற பருவமாகும்.

எலுமிச்சை சாகுபடியில் பெரும்பாலும் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சாதாரண எலுமிச்சைக் கன்றுகளை வேர்க் கன்றுகளாகப் பயன்படுத்துகின்றனர். இதில் குருத்து ஒட்டு முறையில் ஒட்டுச்செடிகளை உருவாக்கி நடவு செய்தாலும் பழங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை. இதனால் விதைகளில் உருவான நாற்றுகளை மட்டுமே சாகுபடி செய்கின்றனர். நல்ல வளர்ச்சி, அதிகமான காய்ப்புதிறன், நோய்கள் மற்றும் பூச்சித்தாக்குதல் குறைவான மரங்களில் விளைந்த பழ விதைகள் மூலம் நாற்றுகளை உருவாக்க வேண்டும்.இதேபோல் பழங்களில் இருந்து பிரித்து எடுத்த விதைகளை 1 முதல் 2 நாட்களில் மேட்டுப்பாத்தி நாற்றங்காலில் விதைத்து விட வேண்டும். வரிசைக்கு வரிசை 10 செ.மீ இடைவெளியில் கோடுகளை அமைத்து 3 முதல் 4 செ.மீ இடைவெளி மற்றும் 1 செ.மீ ஆழத்தில் விதைகளை இட்டு மணலால் மூட வேண்டும். பின்னர் பூவாளியால் நீரை தெளிக்க வேண்டும். நடவு செய்து 20 முதல் 25 நாட்களில் விதைகள் முளைத்து விடும். இதில் 60 முதல் 65 நாள் நாற்றுகளை நெகிழிப் பைகளுக்கு மாற்றி பின்னர் 10 முதல் 12 மாத நாற்றுகளை நடவு செய்தால் நல்லது.

எலுமிச்சை சாகுபடியில் 4 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். மழை இல்லாத மார்ச் முதல் ஜுலை மாதம் வரை பாசனம் அவசியமாகும். கோடை காலங்களில் மரத்தின் அடியில் 15 கிலோ சருகு அல்லது 30 கிலோ பசுந்தாள் பரப்பி வைத்தால் ஈரத்தை காத்து மரங்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியைப் பெருக்கும். இதேபோல் 6 மாதங்களுக்கு ஒரு முறை செய்தால் பழங்களின் எடை 45 சதவீதம் அதிகரிக்கும். எலுமிச்சை சாகுபடியின் போது 90 செ.மீ உயரம் வரை சிம்புகள் இல்லாமல் தண்டு நேராக வளரும் வகையில் காவத்து செய்ய வேண்டும். இதனால் வலிமையான அடிமரம் அமைவதுடன் காய்கள் விரையில் காய்க்க தொடங்கி தரையில் படாமல் இருக்கும். எலுமிச்சை வேர்கள் நிலத்தில் ஆழமாக செல்வதில்லை. 30 செ.மீ ஆழத்தில் வேர்கள் இருப்பதால் மரத்தின் அடியில் கொத்தக்கூடாது. முதல் 4 ஆண்டுகள் வரையில் ஊடுபயிர் சாகுபடி செய்து களைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

இதேபோல் அடிக்கடி கைகடகளை எடுப்பதை விட களைக்கொல்லியை தெளித்து கட்டுப்படுத்தலாம். எலுமிச்சை சாகுபடியில் உரம் இடுவது என்பது முக்கியமாகும். ஆண்டுக்கு இரு முறை முறைப்படி உரம் இட்டு வந்தால் மகசூல் கூடுவதுடன் ஆண்டு முழுவதும் பழங்கள் கிடைக்கும். எலுமிச்சை சாகுபடியில் ஆண்டு முழுவதும் பழங்கள் கிடைத்தாலும், மார்கழி, தை (டிசம்பர், ஜனவரி) மற்றும் ஆடி, ஆவணி (ஜூலை, ஆகஸ்ட்) மாதங்களில் பழங்கள் அதிகமாக கிடைக்கும். நடவு செய்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் காய்ப்புக்கு வரும். மேற்படி முறைகளில் நன்றாக பராமரித்து வந்தால் நடவு செய்து 7 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மரத்தில் இருந்து 1500 முதல் 2 ஆயிரம் பழங்கள் அறுவடை செய்து காயாகவும், பழமாகவும் இரட்டிப்பு லாபம் பெறலாம். இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.