ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திங்கள் கிழமை லக்னோ அணியை சேப்பாக்கத்தில் வைத்து எதிர்கொள்ளவிருக்கிறது. இப்போட்டிக்காக சென்னை அணி ஏற்கெனவே சேப்பாக்கம் வந்து சேர்ந்து விட்டது. இந்நிலையில் போட்டியை முன்னிட்டு சென்னை அணியின் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வலைப்பயிற்சியில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே…

சென்னை அணியின் வலைப்பயிற்சி ஞாயிறன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த பயிற்சி செஷனுக்கு முன்பாக தோனி இன்னொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க வேண்டியிருந்தது. இந்திய அணி 2011 இல் உலகக்கோப்பையை 12 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சி லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை நான்கரை மணிக்குத் தொடங்கியது. தோனி அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டு உலகக்கோப்பை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சி முடிவதற்கு ஐந்தரை மணி ஆகிவிட்டது. நிகழ்ச்சி முடிந்தவுடனேயே ‘ப்ராக்டிஸுக்கு டைம் ஆகிடுச்சு. சேப்பாக் போறேன்’ எனக்கூறிவிட்டு தோனி சேப்பாக்கத்திற்கு விரைந்தார்.
விரைந்து வந்த தோனி சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சென்னை வீரர்களோடு இணைந்துகொண்டார்.

சேப்பாக்கத்தில் இரண்டு பிட்ச்களில் நெட் கட்டப்பட்டிருந்தது. இரண்டிலுமே சென்னை அணியின் வீரர்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், சாண்ட்னர், சிவம் துபே, அம்பத்தி ராயுடு என சென்னை பேட்டர்கள் பட்டாளம் அத்தனை பேரும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஜடேஜாவும் பென் ஸ்டோக்ஸும் அடுத்தடுத்த நெட்களில் நின்று கொண்டு போட்டி போட்டு சிக்சர்களை பறக்கவிட்டிருந்தனர். போட்டிக்கு முன்பாக ஹார்ட் ஹிட்டிங் ப்ராக்டிஸ் செய்வதே வீரர்களின் எண்ணமாக இருந்தது. ஜடேஜா ஸ்பின்னர்களை எளிதில் பெரிய சிக்சர்களாக பறக்கவிட்டார். அதேநேரத்தில் த்ரோ செய்யப்பட்ட பந்துகளையும் வேகப் பந்துகளையும் பவுண்டரியை க்ளியர் செய்து வெளியே பறக்கவிடுவதில் ஸ்பின்னை விட சிறு சிரமத்தை எதிர்கொண்டார். ஜடேஜா, ஸ்டோக்ஸ் இருவரைவிட, சிவம் துபே பந்துகளை நன்றாக டைம் செய்து பெரிய பெரிய சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். இவர்களுக்கிடையே அம்பத்தி ராயுடுவும் கொஞ்ச நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இவர்களெல்லாம் ஆடிக்கொண்டிருக்கையில் கொஞ்சம் லேட்டாக தோனி என்ட்ரி கொடுத்தார். கொஞ்சம் நெட்டுக்கு வெளியே நின்றே வார்ம் அப் ஆகிக்கொண்டவர், கொஞ்ச நேரத்துக்குள்ளேயே நெட்டுக்குள் வந்தார். பென் ஸ்டோக்ஸூம் கான்வேவும் தோனிக்கு வழிவிட்டு தங்களின் பயிற்சியை முடித்துக் கொண்டனர். தோனிக்கு நெட்டில் மைக்கேல் ஹஸ்சி பந்தை த்ரோ செய்தார். முன்னதாக மைக்கேல் ஹஸ்சியுமே தோனியுடன் அந்த உலகக்கோப்பை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இருவருமே அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டுதான் பயிற்சிக்கு வந்திருந்தனர்.
மைக் ஹஸ்ஸியின் த்ரோக்களை தோனி கூலாக பெரிய சிக்சர்களாக மாற்றிக்கொண்டே இருந்தார். ஹாட்ரிக் சிக்சர்களையெல்லாம் பறக்கவிட்டார். தோனியுடன் மொயீன் அலியும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

பேட்டிங்கை முடித்துவிட்டு தோனிக்கு வழிவிட்டிருந்த ஸ்டோக்ஸ் பந்தை கையிலெடுத்தார். சில போட்டிகளுக்கு ஸ்டோக்ஸ் பந்துவீசமாட்டார் என சொல்லப்பட்டிருந்தாலும் பந்துவீச்சு பயிற்சியில் ஸ்டோக்ஸ் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். சிவம் துபேவுக்கு பந்துவீசியவர், சிறிது நேரம் கழித்து பேட்டரே இல்லாமல் வெறும் ஸ்டம்புகளை மட்டுமே குறிவைத்து கொஞ்ச நேரம் பந்துவீசினார். பேட்டிங்கை விட்டுவிட்டு மொயீன் அலி கொஞ்ச நேரம் கேட்ச் ப்ராக்டிஸிலும் பந்துவீச்சு பயிற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இதெல்லாம் நடந்துக் கொண்டிருக்கையிலேயே ப்ராவோ ஒரு பக்கம் ஓடி ஓடி வார்ம் அப் ஆகிக்கொண்டிருந்தார். அணியின் முக்கிய வீரரான ருத்துராஜை தோனி போட்டிக்கு முன்பான ப்ரஸ்மீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். ருத்துராஜ் ஒரு 10 நிமிடத்திலேயே எளிமையாக அந்த மீட்டை முடித்துக் கொண்டார்.
வீரர்களை கடந்து மைதான ஊழியர்களுமே போட்டியை முன்னிட்டு மைதானத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். போட்டிக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே சில ரசிகர்கள் மைதானத்திற்கு முன்பு கூடியிருந்ததையும் பார்க்க முடிந்தது.
லக்னோவிற்கு எதிரான போட்டிக்கு சேப்பாக்கமே பரப்பாக தயாராகி வருகிறது. போட்டியில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்.