சென்னை: Soori About Ilayaraja (இளையரஜா குறித்து சூரி) இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் தனக்குதான் முதலில் இசையமைத்தார் என நடிகர் சூரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
குன்றத்தூர் அருகே உள்ள சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தக்ஷசிலா எனும் தலைப்பில் தொழில்நுட்பம் மற்றும் பண்பாடு சார்ந்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய சூரி
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, இளையராஜா தனது புது ஸ்டூடியோவில் முதன் முதலில் விடுதலை படத்தின் பாடலுக்கு இசையமைத்தார். அது மட்டுமல்லாமல் இசைஞானி இளையராஜா தனது 45 ஆண்டு கால இசைப் பயணத்தில் கதாநாயகனை அருகில் வைத்துக்கொண்டு ட்யூன் போடுவது இதுவே முதன்முறை என என்னிடம் கூறினார்.

மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன சூரி
மாணவர்கள் நன்றாக படித்து நமது மண்ணில் வேலை பார்க்க வேண்டும். பெற்றோர்களை சிறப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் மொபைல் போன்களை தேவைக்கு ஏற்றார்போல் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

வெற்றிமாறனின் விடுதலை
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையிலிருந்து தீமை எடுத்துக்கொண்டு விடுதலை படத்தை உருவாக்கியிருக்கிறார் வெற்றிமாறன் இதில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி ரிலீஸானது. வெற்றிமாறனின் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் படம் வெளியானது.

படத்துக்கு கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸ்
தனது படைப்புகள் மூலம் ஆரோக்கியமான உரையாடலை சமூகத்தில் கிளப்புபவர் வெற்றிமாறன். வெக்கை நாவலில் இருந்து அசுரன் உருவானாலும் அந்தப் படத்தின் மூலம் பஞ்சமி நிலம் குறித்த உரையாடலை தொடங்கிவைத்தார். அதேபோல்தான் விடுதலை படத்தின் மூலம் காவல் துறையின் கோர முகத்தை இன்னொருமுறை வெளிச்சப்படுத்தியிருக்கிறார் வெற்றி என்ற கருத்து எழுந்திருக்கிறது.

சூரியின் செம நடிப்பு
பெரிய ஹீரோக்களை படம் இயக்க ஆசைப்படும் இயக்குநர்கள் மத்தியில் வெற்றிமாறன் தனித்துவமானவர் என்பதை மீண்டும் அவர் நிரூபித்திருக்கிறார். நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரியை இந்தப் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதற்கு நியாயம் செய்யும் விதமாக சூரியும் குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படம் சூரிக்கும் மிகப்பெரிய அடையாளம் என புகழ்ந்து வருகின்றனர்.

பட்டையை கிளப்பிய இளையராஜாவின் இசை
இதுவரை ஜிவி பிரகாஷ் மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் கூட்டணி வைத்த வெற்றிமாறன் விடுதலையில் முதல்முறையாக இளையராஜாவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். படத்தின் பல இடங்களில் இளையராஜாவின் இசை மெய் சிலிர்க்க வைப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல் படத்தின் பாடல்களும் தாலாட்டும் உணர்வை கொடுப்பதாக தெரிவித்து வருகின்றனர்.