விழுப்புரம்: ‘அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் அழிந்து போவார்கள்’ என்று தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்து உள்ளார். அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில் விழுப்புரத்தில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். அதிமுக பல்வேறு சோதனைகளை கடந்து வெற்றிப்பாதையில் பயணித்த ஒரு மாபெரும் கட்சி. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை வென்றெடுப்போம்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுக, மக்கள் பணியில் தொடர்ந்து எப்போதும் இருக்கும். அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள். அதிமுக தொண்டன் உழைப்பால் உயர்ந்தவன். ஆண்டவனால் படைக்கப்பட்ட தொண்டன் அதிமுக தொண்டன். அதிமுகவை எவராலும் சீண்டி பார்க்க முடியாது, தொட்டுப் பார்க்கவும் முடியாது. அதிமுகவை அழிக்க பார்த்தால் அது கானல் நீராகத்தான் இருக்கும். அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம். அதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல். அதிமுகவுக்கு விடிவு காலம் பிறக்கும். ஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று பாஜ ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கு பாஜ மூத்த தலைவர்களே அண்ணாமலைக்கு எதிராக கொதித்து எழுந்தனர். இதையடுத்து, டெல்லிக்கு அழைத்து அண்ணாமலைக்கு அமித்ஷா டோஸ் விட்டு அனுப்பினார். இதன்பின், கூட்டணி பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி அண்ணாமலை கப்சிப் என அடங்கினார். சமீபத்தில் பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் பாஜ கூட்டணி வைத்து உள்ளது என உறுதிப்படுத்தினார்.
எடப்பாடியும் பாஜவுடன் கூட்டணி தொடர்கிறது என்று தெரிவித்தார். மேலும், எடப்பாடியை தொடர்பு கொண்டு அமித்ஷா ரகசியமாக பேசிய தகவல் வெளியாகி அண்ணாமலை அதிர்ச்சியில் உள்ளார். இந்த சூழலில் நேற்று சென்னையில் பேசிய அண்ணாமலை, ‘அதிமுகவுடன் கூட்டணி இறுதியாகி விட்டதாக கூற முடியாது. கூட்டணியில் இருக்கிறோம் என்று அமித்ஷா கூறினாரே தவிர, கூட்டணியை இறுதி செய்யவில்லை’ என்று கூறி உள்ளார்.
இந்த பேச்சு எடப்பாடியை மீண்டும் சீண்டும் வகையில் அமைந்து உள்ளது. இதன் வெளிப்பாடே எடப்பாடியின் பேச்சு அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கொங்கு மண்டலத்தில் யார் பெரிய ஆளு என்பதில் அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் ஈகோ பிரச்னை நிலவி வரும் நிலையில், தற்போதைய வார்த்தை மோதல் மூலம் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது.