சென்னை: சென்னை சூளைமேடு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பேச்சுலர்களுக்காக நடிகை ஷகிலா வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியான நிலையில் நடிகை ஷகிலாவை பலரும் பாராட்டி வருகின்றனர். ஷகிலா எதற்காக போராடினார்? என்பது தொடர்பான முழுதகவல் வருமாறு:
தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஷகிலா. இவர் தற்போது தொலைக்காட்சிகளில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மேலும் அவர் சென்னையில் குடியேறி வசித்து வருகிறார்.
இந்நிலையில் தான் இரவு நேரத்தில் சென்னையில் பேச்சுலர்ஸ்களுக்காக நடிகை ஷகிலா வீதியில் இறங்கி திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு
அதாவது சென்னை சூளைமேடு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் பேச்சுலர்ஸ்கள் ஒன்றாக இணைந்து குடியிருப்பை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் மாதந்தோறும் பராமரிப்பு தொகை செலுத்தி வருகின்றனர்.
குடியிருப்பில் ஏற்பட்ட பிரச்சனை
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக பராமரிப்பு தொகை கட்டவில்லை எனக்கூறி சுமார் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் கிடைக்காமல் அவர்கள் சிரமத்தை சந்தித்தனர். இதுபற்றி அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்திடம் அவர்கள் கேட்டபோதும் உரிய முறையில் அவர்கள் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
பேச்சுலர்ஸ்கள் போராட்டம்
இந்நிலையில் தான் நேற்று இரவு 20க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் இரவில் தரையில் அமர்ந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரும்பலானவர்கள் பேச்சுலர்ஸ்களாக இருந்தனர். தண்ணீர் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் பராமரிப்புத் தொகையாக குடும்பமாக இருப்பவர்களிடம் 2,500 வசூலிக்கப்படும் நிலையில் பேச்சுலர்ஸ்களிடம் மட்டும் ரூ.9 ஆயிரம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.
நடிகை ஷகிலா ஆதரவு
இதுபற்றி அறிந்த நடிகை ஷகிலா இரவில் அங்கு சென்றார். அவர்கள் போராட்டம் நடத்திய பெண்கள், இளைஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அப்போது அநியாயம் செய்யாமல் முறையாக தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். பராமரிப்பு தொகையை உயர்த்தி வாங்குவதை நிறுத்த வேண்டும் என ஷகிலா குரல் கொடுத்தார்.
பாராட்டு
நடிகை ஷகிலாவுக்கும், அந்த அபார்ட்மென்ட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றாலும் கூட நியாயத்துக்காக போராடுபவர்களுக்கு அவர் குரல் கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியான நிலையில் பலரும் ஷகிலாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.