திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கம் உட்பட பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், ராம நவமியன்று பா.ஜ.க மற்றும் வலதுசாரி அமைப்புகளின் ஊர்வலத்தின்போது பெரும் கலவரங்கள் ஏற்பட்டன. `மேற்கு வங்கத்தில் வன்முறை வெடித்ததற்கு, பா.ஜ.க-வினர்தான் காரணம்’ என அந்த மாநில முதல்வர் மம்தா சாடினார். அதை மறுத்த பா.ஜ.க, `என்.ஐ.ஏ சோதனை நடத்தவேண்டும்’ எனக் கூறிவருகிறது.
அதே சமயம், `வன்முறையாளர்களைச் சிறையிலடைப்போம்’ என ஆளுநர் கூறிவருகிறார். இந்த நிலையில், அனுமன் ஜெயந்தியன்று கலவரம் நடக்கலாம் என மக்களுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
கிழக்கு மிட்னாபூரின் கெஜூரியில் இன்று நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “ஏப்ரல் 6-ம் தேதியன்று நம் மக்களை விழிப்புடன் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அனுமனை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அவர்கள் கலவரத்துக்குத் திட்டமிட்டிருக்கலாம். அவர்கள் அனுமதியின்றி பேரணிகளை நடத்துகிறார்கள். வேண்டுமென்றே சிறுபான்மையினரின் பகுதிகளுக்குள் நுழைகிறார்கள்.
எனவே, ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்த ஒரு கொடுமையும் நடக்கக்கூடாது என இந்து சகோதர சகோதரிகளுக்குப் பொறுப்பை வழங்க விரும்புகிறேன். அவர்கள் சிறுபான்மையினர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” எனக் கூறினார்.
எந்தவொரு அமைப்பையும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுக் கூறவில்லையென்றாலும், ராம கலவரத்திலிருந்தே பா.ஜ.க-தான் சில வலதுசாரி அமைப்புகளுடன் சேர்ந்து இதைச் செய்திருக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.