அப்பீல் மனு தாக்கல் செய்ய காங். படைபரிவாரங்களுடன் ராகுல் சூரத் பயணம்- பாஜக கடும் சாடல்!

சூரத்: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் குஜராத் மாநிலம் சூரத் வருகை தருகிறார். ஒரு அப்பீல் மனு தாக்கல் செய்ய படை பரிவாரங்களுடன் ராகுல் காந்தி செல்வது விளம்பரத்துக்குதான் என சாடுகிறது பாஜக.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில் ராகுல் பிரசாரம் செய்தார். அப்போது பிரதமர் மோடி தொடர்பாக ஒரு விமர்சனத்தை ராகுல் முன்வைத்தார். ராகுல் இந்த விமர்சனம் மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் விசாரணை எதுவும் நடைபெறவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு இவ்வழக்கு விசாரணைக்கு, வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடியே தடை வாங்கினார். அதாவது 2019-ல் வழக்கு தொடரப்பட்டு 3 ஆண்டுகள் கிடப்பில் இருந்தது. மேலும் குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஒரு ஆண்டை விசாரணை தடையையும் எதிர்கொண்டிருந்தது.

இந்நிலையில் திடீரென பிப்ரவரி மாதம் இந்த வழக்கு விசாரிக்கபப்ட்டு 30 நாட்களில், ராகுல் காந்தி குற்றவாளி; அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பு உத்தரவு வெளியான 24 மணிநேரத்தில் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் ராகுல் காந்தி வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு தொகுதி காலியானதாகவும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

Rahul Gandhi arrives to Surat with Priyanka, Congress leaders

ராகுல் காந்திக்கு எதிரான இந்த நடவடிக்கை மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தின் இருசபைகளையும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு முடக்கினர்.

இந்த நிலையில் சூரத் கீழ் நீதிமன்ற்ம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார். இதற்காகவே கீழ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது.

சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக ராகுல் காந்தியை அவரது தாயார் சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பொதுச்செயலாளரும் சகோதரியுமான பிரியங்கா காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பட்டாளத்துடன் இண்டிகோ விமானம் மூலம் சூரத் நகர் சென்றார் ராகுல் காந்தி.

Rahul Gandhi arrives to Surat with Priyanka, Congress leaders

ராகுல் காந்தி, அப்பீல் மனு தாக்கல் செய்வதற்காக சூரத் செல்வதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. மேல்முறையீட்டு மனுவை வழக்கறிஞர் தாக்கல் செய்யலாமே.. ஏன் ராகுல் காந்தி, படை பரிவாரங்களுடன் செல்ல வேண்டும்? இது அப்பட்டமான அரசியல் விளம்பர நடவடிக்கைதான்.. இது எல்லாம் மக்களிடத்தில் எடுபடாது என சாடி வருகின்றனர் பாஜக தலைவர்கள்.

அதேநேரத்தில் சூரத் வருகை தரும் ராகுல் காந்தியை வரவேற்க நீதிமன்றம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் குவிந்துள்ளனர். நீதிமன்றத்துக்கு வருகை தரும் ராகுல் காந்தியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ராகுலை வரவேற்கும் பதாகைகளுடன் காலை முதலே ஏராளமான தொண்டர்கள் சூரத் நீதிமன்றம் முன்பாக காத்திருக்கின்றனர். இதனால் சூரத் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காட்சியளிக்கிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.