‘ஆன்லைன் ரம்மி’ விபரீதம் அண்ணனை கொன்ற தம்பி
தூத்துக்குடி, : துாத்துக்குடியில் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த அண்ணன் நல்லதம்பி 36, சொத்தையும் பிரித்து கேட்டதால் ஆத்திரமடைந்த தம்பி முத்துராஜ் 32, அவரை கம்பியால் அடித்துக்கொலை செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே சில்லாநத்தத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன்கள் நல்லதம்பி, முத்துராஜ். லாரி டிரைவராக வேலை செய்த நல்லதம்பி , ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காட்டினார்.
தனது சொத்துக்களை விற்று விளையாடியதோடு தம்பி முத்துராஜிடம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் இழந்தார். முத்துராஜ் அண்ணனிடம் பணத்தைக் திரும்பகேட்டார். அவரோ பூர்வீக வீட்டை விற்று தனது பங்கு தருமாறு கூறினார்.
இதனால் ஆத்திரமுற்ற முத்துராஜ் நேற்று முன்தினம் இரவில் நல்லதம்பியை பண்டாரம்பட்டி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை கம்பியால் அடித்துக்கொலை செய்தார். நேற்று காலை புதியம்புத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் முத்துராஜ் சரணடைந்தார்.
கூலிப்படையால் இளைஞர் கொலையா தாய், சகோதரிகளிடம் விசாரணை
காரைக்குடி, : காரைக்குடி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், சகோதரிகளிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். –
காரைக்குடி அருகே நாச்சுழியேந்தலை சேர்ந்தவர் அழகேஸ்வரன் மகன் அலெக்ஸ் பாண்டி 29. ‘போர்வெல்’ தொழில் செய்து வந்தார். கடந்த 30ம் தேதி வீட்டில் இருந்த அலெக்ஸ்பாண்டியை சிலர் உள்ளே புகுந்து ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பினர். படுகாயமடைந்த அலெக்ஸ் பாண்டியை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு உயிரிழந்தார். ஏ.எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடினர்.
இந்நிலையில் அலெக்ஸ் பாண்டியின் தாயார் இந்திரா 55, சகோதரிகள் தமிழரசி 34, கலையரசி 32 மற்றும் உறவினர்களிடம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.
கொலையில் ஈடுபட்டதாக கூலிப்படையினரையும் போலீசார் பிடித்துள்ளனர். சொத்துக்காக கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
சிறுமியை கடத்தி திருமணம் தாய் தீக்குளிப்பு: 2 பேர் கைது
வடமதுரை, : திண்டுக்கல் மாவட்டம் புத்துார் அரண்மனைபட்டியில் 14 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததால் தாய் தீக்குளித்தார். உறவினர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
புத்துார் அரண்மனைபட்டியை சேர்ந்த 37 வயது பெண் கணவரை பிரிந்து வாழ்கிறார்.
இவரது 14 வயது மகள் பள்ளியில் படிக்கிறார். குஜிலியம்பாறை டி.கூடலுாரையை சேர்ந்த உறவினர்கள் அச்சிறுமியை திருமணம் செய்ய தாயிடம் பெண் கேட்டனர். தாய் மறுத்தார். ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தனர்.
இதனால் விரக்தியடைந்த தாய் நேற்று காலை தீக்குளித்து பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமி கடத்தப்பட்டது தொடர்பாக டி.கூடலுார் பகுதியை சேர்ந்த சிவசக்தி 40, மனைவி ராஜம்மாள் 38, ஆகியோரை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை திருமணம் செய்த அருண்குமார், அவரது தந்தை பாண்டியன், தாய் ஜானகியை தேடுகின்றனர்.
பெண்ணிடம் நகை பாலிஷ் மோசடி பீஹாரைச் சேர்ந்த இருவர் கைது
பரமக்குடி, : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கே.கருங்குளத்தில் பெண்ணிடம் தங்க நகை பாலிஷ் செய்து தருவதாக ஏமாற்றிய பீஹார் மாநிலம் அனந்தபூர் சோக் பகுதியைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கே.கருங்குளம் கருமலைத்துரை மனைவி கல்பனா 22. வீட்டில் தனியாக இருந்த போது இவர் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பாலிஷ் செய்து தருவதாக இருவர் கூறியுள்ளனர். இதையடுத்து கல்பனா ஒன்றரை பவுன் செயினை கழற்றி கொடுத்துள்ளார். அவர்கள் பாலிஷ் செய்தபோது நிறம் மங்கி எடை குறைந்தது போல் தெரிந்ததால் சந்தேகம் அடைந்துள்ளார். அவர் கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் இருவரையும் பிடித்தனர். பரமக்குடி போலீஸ் விசாரணையில் அவர்கள் பீஹார் மாநிலம் அனந்தபூர் சோக் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் 42, முன்னாஷா 40, எனத்தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே மதுரை மாவட்டம் பாலமேடு, எழுமலை, கள்ளிக்குடி, தெற்கு வாசல் ஸ்டேஷன்களிலும், அருப்புக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனிலும் இதுபோன்ற நகை பாலிஷ் மோசடி வழக்குகள் உள்ளன.
ரூ.5க்காக சிறுவன் கொலை கூலி தொழிலாளி கைது
ஹூப்பள்ளி, : ஹூப்பள்ளி அருகே, ஐந்து ரூபாய்க்காக, சிறுவனை கொலை செய்த கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஹூப்பள்ளி ரூரல் பைரதேவர கொப்பாவைச் சேர்ந்தவர் நதீம், 9. அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்தார். பள்ளி விடுமுறை என்பதால், ஹூப்பள்ளி டவுன் ஸ்ரீநகரில் உள்ள, பாட்டி வீட்டிற்கு வந்தார்.
கடந்த மாதம் 30ம் தேதி, வீட்டில் இருந்து மாயமானார். மறுநாள் அரை நிர்வாண நிலையில், பெண்டிகேரியில் முட்புதரில் பிணமாக மீட்கப்பட்டார். பெண்டிகேரி போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் நதீமை கொலை செய்ததாக, கூலி தொழிலாளியான ரவி பல்லாரி, 35, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்தனர். நதீம் பாட்டியின் வீட்டின் அருகே, ரவி வசிக்கிறார். கடந்த மாதம் 29ம் தேதி நதீமிடம், சாக்லேட் வாங்க ரவி, ஐந்து ரூபாய் கொடுத்து உள்ளார். மறுநாளும் நதீம் ஐந்து ரூபாய் கேட்டு உள்ளார்; இல்லை என்று ரவி கூறி உள்ளார்.
ஆனாலும் ஐந்து ரூபாய் கேட்டு, தொல்லை கொடுத்ததால், நதீமை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

இதில், அவர் மயங்கி விழுந்து இறந்தார். உடலை எடுத்து சென்று, பெண்டிகேரியில் வீசியது, விசாரணையில் தெரிந்தது.
பா.ஜ., பிரமுகர் சுட்டுக் கொலை
கோல்கட்டா, : மேற்கு வங்கத்தில் பா.ஜ., பிரமுகர் ராஜு, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேற்கு வங்கத்தின் பர்தமான் மாவட்டம் சக்திகர் பகுதி நெடுஞ்சாலையில், பா.ஜ., பிரமுகர் ராஜு, தன் நண்பர்களுடன் கோல்கட்டா நோக்கி நேற்று முன்தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார்.

மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், ராஜுவின் காரை வழிமறித்தனர். ராஜுவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில் ராஜு பலியானார்.
அவரது நண்பர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.