இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இளையோர் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியானது அங்கே இடம்பெற்ற முக்கோண இளையோர் ஒருநாள் தொடரை அடுத்து, ஆப்கானிஸ்தான் அணியுடன் இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்க, தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி நேற்று முன்தினம் (01) அபுதாபி டோலரன்ஸ் அரங்கில் ஆரம்பமாகியது.
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை மேற்கொண்டு 36.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களை பெற்றது.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 162 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட தொடரை 2 –0 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.