அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. அதன் ஊழியர்களுக்கு ஆட்குறைப்பு குறித்து தகவல் தெரிவிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பாரிஸ் தெருக்களில் வாடகை ஸ்கூட்டர்களால் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுவதற்காகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், தற்போது வாடகை ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கும் முடிவுக்கு ஆதரவாகப் பலரும் வாக்களித்திருக்கின்றனர்.
ரஷ்யாவின் பிரபல ராணுவ பிளாகர் (Blogger) வ்லாட்லென் டாடார்ஸ்கி (Vladlen Tatarsky) , பீட்டர்சன்பெர்க் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. டாடார்ஸ்கி மிலிட்டரி கரெஸ்பான்டென்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
29 வயது இந்திய அமெரிக்கரான ஹிருதிந்து சங்கர் ராய்சௌத்ரி (Hridindu Sankar Roychowdhury) என்பவர், 2020-ல் அமெரிக்காவின் மேடிசன் அலுவலக கட்டடத்தில் வெடி குண்டு வைத்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். குற்றம் உறுதி செய்யப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
வளைகுடா நாடுகள், எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கின்றன. சந்தையில் நிலைத்தன்மை வருவதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றன. இந்த முடிவால் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல்கள் வரை உற்பத்தி குறைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இரானில், ஹிஜாப் அணியாமல் கடைக்குச் சென்ற இரண்டு பெண்கள் மீது அங்கிருந்த ஒருவர் யோகர்ட் (yogurt) (தயிரை) கொண்டு தலையில் அடிக்கும் காட்சிகள் வெளியாகியிருக்கிறது. ஹிஜாப் அணியாமல் செல்வது சட்ட விரோதம் என்பதால் பெண்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
பிரபல ஜப்பானிய இசை அமைப்பாளரும், The last Emperor இசைக்காக, ஆஸ்கர், கிராமி விருதுகளை வென்ற Ryuichi Sakamato, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.
குருத்தோலை ஞாயிறு விழாவை ஒட்டி, புனித பீட்டர் சதுக்கத்தில் பேசிய போப் ஃப்ரான்சஸ், “தன் உடல்நலம் சீராகப் பிரார்த்தனை செய்த அனைவரும் நன்றி” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட 121 வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்த மனு, லாகூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாப்புவா நியூ கினியாவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.