வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரோம்: ஐரோப்பிய நாடான இத்தாலியில் அதிகாரப்பூர்வ தொடர்புகளில் ஆங்கிலம் உட்பட பிற மொழிச் சொற்களுக்கு தடை விதித்துள்ள அரசு, மீறுபவர்களுக்கு 89 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு மொழிகளை, குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கான மசோதா சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தச் சட்டத்தின்படி, அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் எந்தவொரு வெளிநாட்டு மொழியையும், குறிப்பாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தினால், 89 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து உள் கட்டுப்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களில் இத்தாலிய மொழிப் பதிப்புகளைக் கொண்டிருக்க வேண்டியது இனி கட்டாயமாகும்.

ஆங்கிலத்தைப் புறக்கணிப்பது நாகரிகமற்ற விஷயமல்ல. மாறாக ‘ஆங்கிலோமேனியா’ ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது; தாய்மொழியை இழிவுபடுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா அந்நாட்டு பார்லி.,யில் விவாதத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அரசியல் கட்சிகள் ஒப்புதல் பின்பே, சட்டம் அமலுக்கு வரும்.
Advertisement