புதுடில்லி, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்தியா மற்றும் சீன எல்லையில், நம் அண்டை நாடான பூடான் அமைந்துள்ளது. மூன்று நாடுகளின் எல்லையில் டோக்லாம் உள்ளது. கடந்த ௨௦௧௭ல், டோக்லாம் பகுதிக்கு உரிமை கோரி, சீனப் படைகள் அங்கு குவிக்கப்பட்டன.
இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, நம் படைகளும் குவிக்கப்பட்டன. பல சுற்று பேச்சுக்கு பின் இந்தியா – சீனா இடையிலான மோதலுக்கு தீர்வு காணப்பட்டது.
இதற்கிடையே, பூடான் – சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சு வாயிலாக தீர்வு காண, இரு நாடுகள் இடையே 2021ல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த எல்லைப் பிரச்னையில் பூடானுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதால், இரு நாடுகளுக்கு இடையே நெருக்கமான நட்புறவு நீடித்து வருகிறது.
இந்நிலையில், ”டோக்லாம் என்பது மூன்று நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. இதில் பெரிய நாடு, சிறிய நாடு என்ற பேதம் கிடையாது.
”இதில் பூடான் மட்டும் தனியாக தீர்வு காண முடியாது. இதில் சீனாவுக்கும் பங்கு உள்ளது. இதில் இணைந்து தீர்வு காண வேண்டும்,” என, பூடான் பிரதமர் லோட்டே ஷிரிங்க் சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.
இது, பூடானை தன் கைக்குள் வைத்து, டோக்லாம் பகுதியை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா திட்டமிடும் என, மத்திய அரசு கவலைப்பட்டது.
இந்நிலையில், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக நேற்று புதுடில்லி வந்தார்.
அவரை, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். அவரது பயணம், இந்தியா – பூடான் இடையிலான தனித்துவமான உறவை மேலும் வலுவாக்கும் என ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை பூடான் மன்னர் இன்று சந்தித்து பேச உள்ளார்.