எம்.எல்.ஏ உடன் உலாவரும் பில்கிஸ் பானு வழக்குக் குற்றவாளி; விடுதலையை பரிசீலிக்குமா உச்ச நீதிமன்றம்?

பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வழக்குக் குற்றவாளி, குஜராத் மாநில எம்.பி, எம்.எல்.ஏவுடன் பொதுமேடையில் தோன்றியது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதை தொடர்ந்து, கொடூர குற்றச்செயல்கள் புரிந்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதில்லை எனப் பல மாநிலங்களில் உள்ள நடைமுறையை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குஜராத்தில், 2002-ம் ஆண்டு இஸ்லாமியருக்கு எதிராக நடந்த வன்முறையில், கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற இஸ்லாமியப் பெண், 12 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். அவரின் 3 வயது பச்சிளம் குழந்தை உட்பட அவரின் குடும்பத்தினர் 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வு நடந்த மறுநாள், அவர் அகமதாபாத் லிம்கேடா காவல் நிலையத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் பெயர்களுடன் புகாரினை அளித்தார். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் ஒருவரின் பெயர் கூட சேர்க்கப்படவில்லை. 2003 மார்ச் 25-ல் லிம்கேடா மாஹிஸ்திரேட்டால் ’Summary A’ என்ற காவல்துறை அறிக்கை நிராகரிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Supreme Court Of India

பில்கிஸ் பானுவுக்காக, தேசிய மனித உரிமை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க, மூத்த வழக்கறிஞரான ஹரிஸ் சால்வேயை இவ்வழக்கில் நியமித்தது. இவ்வழக்கு குஜராத்தில் நடந்தால் நியாயம் கிடைக்காது என, வேறு மாநிலத்திற்கு மாற்ற பில்கிஸ் பானு கோரியதை ஏற்று, உச்ச நீதிமன்றம் மும்பை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கினை மாற்றியது.

பில்கிஸ் பானுவை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது, அவருடைய குடும்பத்தினரைக் கொலை செய்தது உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள், 2008-ம் ஆண்டு ஜனவரி 21 அன்று நிரூபிக்கப்பட்டதால், 12 குற்றவாளிகளுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 302, 120 பி, 149, 376 (2) (இ) (ஜி) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. மும்பை நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில் இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும், குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆவணங்களை திருத்தியது, சாட்சிகளை மிரட்டி கலைத்ததற்கென 7 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 2 மருத்துவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

ஆனால், 11.07.2022 ல் பெரும் அதிர்ச்சியான நிகழ்வு அரங்கேறியது. இவ்வழக்கில், கொடூர குற்றத்தைச் செய்த அனைவரும் குஜராத் மாநில அரசால், முன் கூட்டியே விடுதலைக்கு பரிந்துரைக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர். வழக்கு நடைபெற்ற மும்பை சி.பி.ஐ-யும், நீதிமன்றமும் வெறும் மதவெறுப்பு அடிப்படையில் இக்கொடூர குற்றம் புரிந்த குற்றவாளிகள், தண்டனைக்காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கப்படக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தபோதும், குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இவர்களின் விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தார். தனது மனுவில் `உச்ச நீதிமன்றத்தில் விளக்கப்பட்டுள்ள சட்டத்தின் தேவைகளை முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு, குஜராத் அரசு ஓர் இயந்திரகதியான விடுதலை ஆணையைப் பிறப்பித்துள்ளது. தன்னை 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது வன்புணர்வு செய்து, தன் மீதும் தனது ஆன்மா மீதும் வன்முறையையும் கொடுமையையும் செய்த 11 பேரின் விடுதலையால் தீவிரமாக காயப்பட்டு, முழு அவநம்பிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானுவும், சில சமூகச் செயற்பாட்டாளர்களும் தொடுத்திருந்த மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வரவிருந்த சில நாள்களுக்கு முன்னர், ஷைலேஷ் சிமன்லால் பட் என்ற தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி, குஜராத் தஹோத்தில் நடந்த கூட்டத்தில் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினருடன் சரிசமாக மேடையில் அமர்ந்திருந்தார். வழக்கு விசாரணை நடைபெறும் சூழலில், குஜராத் மாநில எம்.பி – எம்.எல்.ஏ.க்களுடன் குற்றவாளியும் மேடையில் அமர்ந்திருந்த சம்பவம் அதிர்ச்சி அலையை உருவாக்கியது.

ஷைலேஷ் சிமன்லால் பட் (இடமிருந்து 3வது)

இந்நிலையில், நீதியரசர்கள் கே.எம்.ஜோசப், வி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய புதிய அமர்வு, பில்கிஸ் பானு விஷயத்தில் பதியப்பட்ட 6 மனுக்களையும் ஒன்றாக எடுத்துக்கொண்டு, குஜராத் அரசிற்கும், மத்திய அரசிற்கும், வரும் 18-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்ததால், தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே இக்கைதிகளை விடுவிக்க குஜராத் அரசிற்கு அதிகாரம் உள்ளதா என்றும், இத்தைகைய கொடூர குற்றச் செயல்கள் செய்தவரை முன்கூட்டியே விடுதலை செய்வதில்லை எனப் பல மாநிலங்களில் உள்ள நடைமுறை உச்ச நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படுமா எனவும் அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

தண்டனைக் காலத்துக்கு முன்னரே விடுவிக்கப்பட்டதால், ஷைலேஷ் சிமன்லால் பட் குற்ற நீக்கம் செய்யப்பட்டவர் அல்லர். நாட்டையே உலுக்கிய வழக்கில் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி. அப்படிப்பட்ட ஒருவரை எம்.எல்.ஏ தான் கலந்துகொள்ளும் நிகழ்வு மேடையில் அமரவைத்தால் வரக்கூடிய விமர்சனங்கள் பற்றி அறிந்தும் அது செய்யப்படுகிறது என்றால், அதன் மூலம் சொல்ல வருவது என்ன? யாருக்குக் கொடுக்கும் தைரியம் இது? யாரை அச்சுறுத்தும் செயல் இது?

முன்னதாக, 11 பேருக்கும் குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்தபோது பில்கிஸ் பானு சொன்னது நினைவில் வருகிறது. ’’என் குடும்பத்தையும், என்னையும் சிதைத்து, என் மூன்று வயதுக் குழந்தையை என்னிடமிருந்து பறித்துக்கொண்ட 11 குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அரசின் முடிவு என்னை மரத்துப்போகச் செய்துள்ளது. நான் நம் நாட்டின் நீதிமன்றங்களை நம்பினேன். இப்போது நான் அனுபவிக்கும் துயரமும், அசைத்துப்போடப்பட்ட என் நம்பிக்கையும் எனக்கானது மட்டுமல்ல. நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமானது’’ என தன் ஆற்றாமையை வெளிப்படுத்தியிருந்தார்.

பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் இழப்பு நேர் செய்ய இயலாதது. அவர்களுக்குக் குறைந்தபட்சம் கொடுக்கக் கூடிய நீதி, குற்றவாளிகளுக்கான தண்டனை. ஆனால், அவர்களை விடுதலை செய்தது மட்டுமல்லாது, எம்.எல்.ஏ மேடையில் தன்னுடன் குற்றவாளியை அமரவைக்கும் காட்சி, அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண் அனுபவிக்க நேர்ந்த துயரங்களை தூர்வாரி இரட்டிப்பாக்கும்.

சட்டம் குற்றவாளிகளுக்கு தண்டனைக் குறைப்பு செய்தது, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவை இப்படி தண்டிக்கத்தானா?

– நிலவுமொழி செந்தாமரை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.