சேலம்:
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது எதிர்காலம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் சொன்ன பதிலும்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அதிமுகவில் நிலவிய கூச்சல் குழப்பங்கள் தற்காலிகமாக அடங்கி இருக்கின்றன. இரட்டை தலைமைக்கு முடிவுகட்டி, அதிமுகவின் சர்வ அதிகாரமும் படைத்த ஒற்றைத் தலைமையாக உருவெடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
மேலும், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டதும் உறுதியாகியுள்ளது.
அடுத்தடுத்து அடி
இந்த சூழலில்தான், அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அதை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இவ்வாறு அடுத்தடுத்து அடி விழுவதால் ஓபிஎஸ் சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் எதிர்காலம்
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு, முதன்முறையாக தனது சொந்த ஊரான சேலத்துக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று சென்றார். இதையடுத்து, இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ஓபிஎஸ் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்..” என நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு சிரித்தபடியே பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். அடுத்தவர்கள் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. என்னிடம் கேட்க வேண்டிய கேள்விகளை கேளுங்கள். அவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை அவரிடம் கேளுங்கள்..” எனக் கூறி சிரித்தார்.
“பக்குவம் அடைந்துவிட்டோம்”
இதையடுத்து, ஓபிஎஸ் தொடர்ச்சியாக நீதிமன்றத்தை நாடி வருவது உங்கள் செயல்பாட்டை பாதிக்கிறதா? என கேட்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் பக்குவம் அடைந்துவிட்டோம். ஏனெனில், எம்ஜிஆர் கட்சியை உருவாக்கிய போது பல சோதனைகளை சந்தித்திருக்கிறார். அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவை வழிநடத்த ஜெயலலிதாவும் பல சோதனைகளை கடந்தார். இருபெரும் தலைவர்களும் சோதனைகளை தாண்டிதான் வெற்றி பெற்றார்கள். ஒவ்வொரு காலத்திலும் அதிமுக சோதனையை சந்திக்கும். பின்னர் மாபெரும் வெற்றி பெறும். இதுதான் வரலாறு” என்றார்.