நியூயார்க்: ட்விட்டர் வெரிஃபிகேஷனுக்காக தொகையை தர மறுத்ததால் பிரபல செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸின் ட்விட்டர் பக்க ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அவரது நடவடிக்கைகளில் ஒன்றுதான் ‘ப்ளூ டிக்’ அங்கீகாரம் பெற்றுள்ள பயனர்களிடத்தில் அதற்கென மாதந்தோறும் கட்டண சந்தா வசூலிப்பது. எலன் மஸ்க்கின் நடவடிக்கைக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு இருந்து வந்தது. ஆனாலும் தன் முடிவில் மஸ்க் உறுதியாக இருந்தார். அதையடுத்து குறிப்பிட்ட சில நாடுகளில் ப்ளூ டிக் பயனர்கள் இடத்தில் சந்தா வசூலிக்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தது.
அதன்படி தனி நபர்களுக்கு 7 டாலரும், செய்தி நிறுவனங்களுக்கு 1000 டாலரும் கட்டணம் (அமெரிக்காவில்) விதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஏப்ரல் மாதத்துக்கான வெரிஃபிகேஷன் டிக்-க்குக்கான தொகையை செலுத்த நியூயார்க் டைம்ஸ் மறுத்ததால் அதன் ப்ளூ டிக் நீக்கப்பட்டது.
இதுகுறித்து நியூயார்க் டைம்ஸின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் கூறும்போது, “ட்விட்டர் வெரிஃபிகேஷன் மாதந்திர சந்தா தொகையை வரும் ஏப்ரல் மாதம் முதல் நாங்கள் வழங்க போவதில்லை. மேலும் எங்கள் நிறுவனத்தை சார்ந்த ஊழியர்களுக்கான (முக்கியச் செய்திகளை வழங்குபவர்கள் தவிர்த்து) வெரிஃபிகேஷன் தொகையையும் நாங்கள் செலுத்த போவதில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலன் மஸ்க் இது குறித்து கூறும்போது, “நியூயார்க் டைம்ஸ் கூறுவது பாசாங்குதனமாக உள்ளது. வெரிஃபிகேஷனுக்கான சந்தா தொகை தரமாட்டோம் என்று கூறும் அவர்கள் தங்கள் இணையதளத்துக்கு சந்தா செலுத்தும்படி கட்டாயப்படுத்துவதில் மிகவும் தீவிரமாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.