காரைக்கால்: கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அங்கு பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
காரைக்கால் அருகேவுள்ள பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மூளையில் ஏற்பட்டிருந்த கட்டி காரணமாக சிகிச்சைப் பெறுவதற்கான கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் நேற்று (ஏப்.2) இரவு உயிரிழந்தார்.
இது குறித்து காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவராஜ்குமார் கூறியது: “மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கடந்த 1-ம் தேதி தெரிய வந்துள்ளது. இந்நிலையில் 2-ம் தேதி இரவு அவர் உயிரிழந்தார். ஆனால், இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூற முடியாது” என்றார்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி முதல் நேற்று வரை சுமார் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும், சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.குலோத்துங்கன் இன்று (ஏப்.3) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “காரைக்கால் மாவட்டத்தில் சமீப காலமாக கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். திரையரங்கங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதுடன் தனிமனித இடைவெளி கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.