கர்நாடகாவில் மும்முனைப் போட்டி… முந்துவது யார்? – ஓர் அலசல்

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டதிலிருந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைப்போம் என்று ஆளுங்கட்சியான பா.ஜ.க கூறிவருகிறது. எதிர்க் கட்சியான காங்கிரஸோ, மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறிவருகிறது.

பசவராஜ் பொம்மை

மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், கணிசமான தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்த மூன்று கட்சிகள் தவிர, கர்நாடகாவில் புதிதாகக் களமிறங்கியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. தற்போது, பா.ஜ.க-வுக்கு 119 எம்.எல்.ஏ-க்களும், காங்கிரஸுக்கு 75 எம்.எல்.ஏ-க்களும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 28 எம்.எல்.ஏ-க்களும் இருக்கிறார்கள்.

இங்கு, பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, வாக்காளர்களைக் கவர்வதற்காக ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸும் பா.ஜ.க-வும் அறிவித்தன. இதில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் மக்களைக் கவரும் வகையில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில், சாதி ரீதியில் வாக்குகளைப் பெறும் வகையில் பல்வேறு உத்திகளை வகுத்துவரும் பா.ஜ.க., 150 தொகுதிகளைப் பிடிப்பதற்கு இலக்கு நிர்ணயித்து இயங்கிவருகிறது.

காங். முன்னாள் முதல்வர் சித்தராமையா

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட பிறகு, உடனடியாக நடைபெறுவது கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்தான். இந்தத் தேர்தலின் முடிவுகள், அடுத்து நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தாக்கம் செலுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவரான பா.ஜ.க-வின் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனாலும், அவருடைய மகன் பி.ஒய்.விஜயேந்திரா களமிறங்குகிறார். இவர், எடியூரப்பாவின் தொகுதியான ஷிகரிபுராவில் போட்டியிடுகிறார். வாரிசு அரசியல் குற்றச்சாட்டு காரணமாக, இவருக்கு டிக்கெட் கொடுக்க கட்சித் தலைமை தயக்கம் காட்டுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

குஜராத் போன்ற மாநிலங்களில் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களில் பலருக்கும் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க-வில் வாய்ப்பு தரப்படவில்லை. கர்நாடகாவிலோ, சிட்டிங் எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவிருக்கிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், பா.ஜ.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலோர் சொந்தமான வாக்கு வங்கியை வைத்திருக்கிறார்கள்.

எடியூரப்பா

பசவராஜ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் ஊழல்கள் மலிந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் அடுக்கப்படும் நிலையில், வேறு சில கணக்குகள் மூலம் வெற்றியைப் பெற பா.ஜ.க திட்டமிட்டுவருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்த நான்கு சதவிகித இடஒதுக்கீட்டை ரத்துசெய்துவிட்டு, கர்நாடகாவில் பெரும்பான்மை சமுதாயங்களாக இருக்கம் லிங்காயத், ஒக்காலிகர் ஆகியவற்றுக்கான இடஒதுக்கீடு சதவிகிதத்தை பா.ஜ.க அரசு அதிகரித்திருக்கிறது.

இதற்கு எதிராக பஞ்சாரா, பீவி போன்ற சமூகத்தினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். எடியூரப்பாவின் வீட்டை போராட்டக்காரர்கள் கல் வீசித் தாக்கியிருக்கிறார்கள். இந்தப் பிரச்னை, வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் பிரச்னையாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியோ, மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கான நான்கு சதவிகித இடஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும் என்று கூறுகிறது.

ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக கர்நாடகா இருந்தது. இந்த முறை மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சி, தனது முதல்வர் வேட்பாளராக சித்தராமையாவை முன்னிறுத்துகிறது. மேலும், பசவராஜ் பொம்மை அரசுக்கு எதிராக உறுதியாகக் களமாடுபவராக, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் இருந்துவருகிறார். எனவே, டி.கே.சிவகுமாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று காங்கிரஸ் உறுதியளித்திருக்கிறது.

குமாரசாமி

முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸையும் பா.ஜ.க-வையும் சமதொலைவில் வைத்துப் பார்க்கிறது. குமாரசாமியைப் பொறுத்தளவில், வரும் தேர்தலில் கணிசமான தொகுதிகளைப் பெற்று, யார் முதல்வர் என்பதை முடிவுசெய்யும் சக்தியாக இருப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். பாரம்பர்யமாக தங்களுக்கு செல்வாக்கு இருக்கும் பழைய மைசூரு பகுதியைத் தாண்டி, பிற பகுதிகளிலும் தனது செல்வாக்கை அதிகரிக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் சில முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், விவசாயிகளின் பிரச்னைககள், பிராந்திய வளர்ச்சி, சமூகநீதி போன்றவற்றிலும் குமாரசாமி கவனம் செலுத்திவருகிறார்.

கர்நாடகாவில், 2018-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைத்தன. குமாரசாமி முதல்வராக இருந்தார். அந்த ஆட்சி கவிழ்ந்த பிறகு, 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. கட்சி மாறி சில எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை பா.ஜ.க பெற்றது. பிறகு, அந்த எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர்.

டி.கே.சிவக்குமார்.

தற்போது, பசவராஜ் பொம்மை அரசு ஊழலில் ஊறித்திளைப்பதாக மேற்கொள்ளப்படும் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடுவதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆகவேதான், ‘சாதியக் கணக்கு’ அடிப்படையிலான உத்திகளை வகுத்து, தனது வெற்றிக்காக புதிதாக ஒரு ரூட்டை பா.ஜ.க எடுத்திருக்கிறது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அந்த வகையில், வெற்றிக்கான ரேஸில் காங்கிரஸ் கட்சி தற்போது முன்னிலை வகிக்கிறது என்று சொல்லலாம். வரும் நாட்களில் சூழல் மாறவும் வாய்ப்பு இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.