கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவை வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் அமர காங்கிரஸ் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ் வேட்பாளர்கள்
கடந்த மார்ச் 25ஆம் தேதி 124 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இன்னும் 100 பேரின் பட்டியல் எஞ்சியுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் மைசூரு மாவட்டம் வருனாவில் சித்தராமையா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில் கோலார் தொகுதியிலும் போட்டியிட விரும்புவதாக கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக கட்சி தலைமையின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, ஏப்ரல் 4ஆம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அன்றைய தினம் மத்திய தேர்தல் குழு கூட்டமும் நடைபெறுகிறது.
வருனா தொகுதியில் போட்டி
இதில் அனுமதி பெற்று இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வெற்றி, தோல்வி என்பது வேட்பாளர்களின் கைகளில் தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் வருனா தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. யார் வேண்டுமானாலும் என்னை எதிர்த்து போட்டியிடலாம். அதைப் பற்றி கவலை இல்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்காக என்னுடைய தொகுதிக்கு செல்வேன்.
மகன் பார்த்து கொள்வான்
அதன்பிறகு பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டேன். எனது மகனும், எம்.எல்.ஏவுமான வருனா யதிந்தரா பிரச்சார வேலைகளை பார்த்து கொள்வார். நான் மாநில அளவில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். என்னை எதிர்த்து வருனா தொகுதியில் எடியூரப்பா மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் எனச் சொல்லப்படுகிறது. நான் சவாலுக்கு தயார் என்று தெரிவித்தார்.
விஜயேந்திரா போட்டி
இதற்கிடையில் என்னுடைய மகன் விஜயேந்திரா வருனா தொகுதியில் போட்டியிட மாட்டார். ஷிகாரிபூர் தொகுதியில் இருந்து போட்டியிடுவார். கட்சி தலைமையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக எடியூரப்பா சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி, 52 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எஞ்சிய தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, அகில இந்திய காங்கிரச் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான மத்திய தேர்தல் குழுவிடம் அனுமதி பெறப்படும் எனத் தெரிவித்தனர். மறுபுறம் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.