கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனை வரும் 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4 பேராசிரியர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கலாஷேத்ராவில் பயின்றி முன்னாள் மாணவி ஒருவர் பாலியல் புகார் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி சென்னை அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆசிரியர் ஹரி பத்மன் தனக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவுகள் அளித்ததாக புகார் அளித்தார்.
தொடர்ந்து புகார்கள் குவிந்ததால் பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்ய முயன்றபோது, தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து தனிப்படை அமைத்து பேராசிரியர் ஹரி பத்மனை அதிகாரிகள் தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று அதிகாலை பேராசிரியர் ஹரி பத்மனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 30-ம் தேதி நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஐதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன், திரும்ப வராமல் தலைமறைவானார்.
இந்நிலையில் அவரை அவரது நண்பரின் வீட்டில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே கலாஷேத்ரா விவராகத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் ஹரி பத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
newstm.in