கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாக புகார்கள் எழுந்தது.
இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பேசும் பொருளானது.
ருக்மணி தேவி கலை கல்லூரியில் கடந்த 2019ஆம் ஆண்டு படித்து வந்த முன்னாள் மாணவி ஒருவர் நடன உதவி பேராசிரியராக பணியாற்றிய ஹரி பத்மன் என்பவர் மீது காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே ஏப்ரல் 5ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் புகார் எழுந்துள்ள 4 பேர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை தேர்வு எழுத கல்லூரிக்கு திரும்ப மாட்டோம் என மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திய நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தினர். கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு 13ம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.