கலாஷேத்ரா ஹரி பத்மன் சிக்கியது எப்படி? வடசென்னையில் போலீசார் அதிரடி!

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் கற்று தரப்படுகின்றன.

இந்நிலையில் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் உள்ளிட்ட 4 பேர் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடிதம் எழுதி பார்த்தனர். பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து விஷயம் விஸ்வரூபம் எடுத்தது.

தமிழக சட்டமன்றத்திலும் கலாஷேத்ரா கல்லூரியின் பாலியல் தொல்லை விவகாரம் பரபரப்பை கிளப்பியது. உடனே குற்றவாளிகள் யாராக இருந்தாலும் விட மாட்டோம் என்றும், மாணவிகளின் பாதுகாப்பிற்கு பெண் போலீசார் பணியில் அமர்த்தப்படுவர் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய நிலையில் திடீரென தலைமறைவு ஆகிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். சென்னை திரும்பிவிட்டதால் நகர் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். ஹரி பத்மன் வீடு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தினர். அவரது தொலைபேசி அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த சூழலில் வடசென்னையில் உள்ள நண்பரின் வீட்டில் ஹரி பத்மன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று ஹரி பத்மனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை அழைத்து வந்து தீவிர விசாரணையில் ஈடுபட உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.