ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே காதலிக்கும் போது கர்ப்பமான கல்லூரி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கர்பாளையம் பகுதியில் கிணறு ஒன்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கிணற்றில் சாக்கு மூட்டையில் கால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் நாய்க்கன்காடு பகுதியை சேர்ந்த ஸ்வேதா(21) என்பது தெரியவந்தது. கடந்த 28ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
எனவே பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ஸ்வேதா, கல்லூரியில் உடன் படித்து வந்த லோகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததில் ஸ்வேதா கருத்தரித்துள்ளார். இதனால் லோகேஷ் கருவை கலைப்பதற்காக ஸ்வேதாவை அழைத்து கொண்டு கோவைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அங்கு ஸ்வேதாவை பரிசோதித்த மருத்துவர்கள் கருவை கலைக்க முடியாது என திருப்பி அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து இருவரும் லோகேஷின் பாட்டி வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது ஸ்வேதா லோகேஷை திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும், அதற்கு லோகேஷ் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லோகேஷ், யாருக்கும் தெரியக்கூடாது என நினைத்து ஸ்வேதாவின் கை, கால்களை கட்டி சாக்குமூட்டையில் வைத்து கிணற்றில் வீசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் லோகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in