காலை நேர பரபரப்பில் மூன்று சட்னி! – இல்லத்தரசி பக்கங்கள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

நேற்று இட்லிகள் தினம் கொண்டாடிய போது மனதில் தோன்றிய விஷயம் இது. நிறைய பேர் வீட்டில் காலை நேரத்தில் (வீட்டில்) பயங்கர டென்ஷனாக இருப்பார்கள். காலை உணவை செய்து விடுவார்கள் ஆனால் அதற்கு தொட்டுக்கொள்ள சட்னி… அங்க தான் பிரச்சனையே ஆரம்பமாகும்.

ஒருத்தருக்கு இந்த சட்னி பிடிக்கும் இன்னொருத்தருக்கு இன்னொரு சட்னி பிடிக்கும் ஆக மொத்தத்துல ஒரே சட்னிய யாரும் சாப்பிட மாட்டாங்கிறாங்க என்பதாகத்தான் பல இல்லத்தரசிகள் புலம்புவார்கள் இப்படி யோசிக்கிறப்போ ஒரு விஷயம் தோணுச்சு எல்லாருக்கும் என்ன சட்னி பிடிக்கும்னு தெரிஞ்சு வச்சுகிட்டா நாம அதுக்கேற்றார் போல் செய்து வைத்து விடலாமே! கொஞ்சமே கொஞ்சம் திட்டமிடல் இருந்தா போதுங்க .. காலை நேர பரபரப்பு என்பது எல்லாம் இருக்கவே இருக்காது.

Chutney

காலை நேர பரபரப்பு மட்டுமில்ல.. இரவு நேர பரபரப்பும் எங்க வீட்ல இல்ல.. அட ஆமாங்க ஆமா.. எனக்கு யார் யாருக்கு என்னென்ன சட்னி பிடிக்கும்னு எல்லாம் அத்துபடி. வீட்டு பெரியவர்கள், உறவு மற்றும் நட்பு வட்டாரம், கணவர் மற்றும் பிள்ளைகள் இப்படி யார் யாருக்கு என்னென்ன சட்னி பிடிக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதனால் அதைமுன்கூட்டியே செய்து வைத்து விடுவேன். (யானையே வாங்கியாச்சு.. அங்குசம் வாங்கறதா கஷ்டமா!?) இட்லி ,தோசை ,பொங்கல், பணியாரம், பிரட் சாண்ட்விச் ,அடைன்னு வித்தியாசமா காலை உணவை தயார் செய்தாச்சு.

பிறகு சட்னி அரைப்பதா கஷ்டம் ? கண்டிப்பாக இல்லை. இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை உண்மையிலேயே சொல்கிறேன் தட்டில் கை வைத்ததும் என்ன இந்த சட்னியா என்று கேட்டு முடிப்பதற்குள் நான் இன்னொரு சட்னியை அரைத்து விடுவேன். எனக்கு சமையல் பிடிக்கும் என்பதால், விரும்பி செய்வேன்.

Chutney

இது எனக்கு என் மாமியார் சொல்லிக் கொடுத்தது. ஆம் அவர்களுக்கு அவர்கள் மாமியார் சொன்னதாகச் சொல்வார்கள் . எங்க மாமா , அவங்க அம்மாவிடம் என்னம்மா.. இதுக்கு போய் இந்த சட்னியா…ஆஆஆ … ன்னு கேட்டு முடிக்கிறதுக்குள்ள அத்தையோட மாமியார் (ஆண்டாள் ஆயா) அதாவது மாமாவின் அம்மா ஓடிப்போய் அம்மியில் ஒரு சட்னி அரைத்து மகனின் தட்டில் வைப்பார்களாம்.. அதே பழக்கம் தான் எனது மாமியாரிடமும்.

எனது கணவர் மற்றும் மைத்துனர், இல்லை நானே என்றால் கூட, ‘அத்தை என்ன அத்தை இன்னைக்கும் இதே சட்னியா? ‘ன்னு கேட்டு முடிக்கிறதுக்குள்ள எங்க அத்தை இன்னொரு சட்னியை அரைச்சிடுவாங்க . (பிடி உஷா ஸ்பீட்ல) . (எப்படித்தான் சோம்பல் படாமல் அரைக்கிறார்களோன்னு எனக்கு மலைப்பா இருக்கும் ) வாழ்க்கை ஒரு வட்டம் அல்லவா!

Chutney

இதோ அத்தையின் இடத்தில் இப்ப நான்.. அதே டயலாக்… அதேடெலிவரி… இப்பவும் எந்தவித மாற்றமும் இல்லை . ஒரு வித்தியாசத்தை தவிர!

அம்மிக்குப் பதில் மிக்ஸி .அம்புட்டுதான்!. அதனால் காலை நேரத்தில் பரபரப்பு அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒரு டிபனுக்கு குறைந்தது 3 சட்னி அரைத்து விடுவேன்.

இரண்டு சட்னி வழக்கம் போல. மூன்றாவது சட்னி கொஞ்சம் வித்தியாசமாய்… யாருக்கு எது வேண்டுமோ அதை அவர்கள் தொட்டுக் கொள்ளலாம். உதாரணத்திற்கு பொங்கல் ,உப்புமா என்றால்.. பச்சை மிளகாய் சட்னி ,துவரம் பருப்பு பூண்டு சட்னி, கத்தரி வெங்காய சட்னின்னு ஏதாவது புதுசா செய்திடுவேன்.

அடை என்றால், தக்காளி அரைத்த சட்னி பச்சை மிளகாய் சட்னி, இஞ்சி சட்னி.. இப்படி ஏதாவது… வித்தியாசமாய்… குழிப்பணியாரம் ன்னா வறுத்த மிளகாய் வெங்காய சட்னி, பூண்டு துவரம் பருப்பு சட்னி, சீரக சட்னி.. இப்படி ஏதாவது…

பூரி சப்பாத்தி என்றால் சிவப்பு மிளகாய் சட்னி ,மாங்காய் தேங்காய் சட்னி , தக்காளி இனிப்பு சட்னி…
பிரட் சாண்ட்விச் என்றால்  புதினா மாங்காய் சட்னி, பூண்டு மிளகாய் சட்னி …

Chutney

இட்லி தோசை என்றால் வதக்கிய வெங்காய சட்னி, மல்லி சட்னி ,.  பூண்டு சட்னி, எள் சட்னி, கடலைப் பருப்பு சட்னி.. பொட்டுக் கடலை வெங்காய சட்னி…ஆக… எங்கள் வீட்டில் எல்லா நாளும் மூன்று சட்னி தான்(எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பதுபோல) தினந்தோறும் 3 சட்னி கிட்னிக்கு நல்லது பாஸ்..!ஹிஹிஹி.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.