காரைக்குடி: “காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியின் தகுதி இழப்பு நடவடிக்கை மூலம், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பை நரேந்திர மோடியின் அரசு உருவாக்கித் தந்திருக்கிறது” என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகனும் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறியது: “ஒருவகையில், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பை நரேந்திர மோடியின் அரசு உருவாக்கித் தந்திருக்கிறது. ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு குறித்து எல்லாம் நான் நுணுக்கமாக பேசப்போவது கிடையாது. ஆனால், சில செய்திகளை, ஊடகங்களின் வாயிலாக மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
2019-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி, ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் ஒரு தேர்தல் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அக்கூட்டம் முடிந்தபிறகு, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் அவர், ஒரு வாசகத்தை சொல்கிறார். இவை நடந்தது கர்நாடக மாநிலம் கோலாரில். 3 நாட்கள் கழித்து 2019 ஏப்ரம் 16-ம் தேதி, பூர்ணேஷ் மோடி என்பவர் குஜராத் மாநிலம் சூரத்தில் வழக்கு தொடர்கிறார். கோலாருக்கும் சூரத்துக்கும் என்ன சம்பந்தம்? கர்நாடக மாநிலத்தில் பேசியதற்காக, குஜராத் மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2019 ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்த வழக்கு, ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் கிடப்பில் இருந்தது. 2019 முதல் 2022 வரை இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும், ராகுல் காந்திக்கு தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என்று இந்த புகார்தாரர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
2022 மார்ச் மாதத்தில், அந்த புகார்தாரர் தன்னுடைய வழக்கை விசாரிக்க கூடாது என்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவரே கேட்கிறார். பொதுவாக வாதியின் வழக்கை விசாரிக்கக் கூடாது என்று பிரதிவாதி கேட்பர். ஆனால், இந்த விவகாரத்தில், வாதியே தன்னுடைய வழக்கை விசாரிக்கக் கூடாது என்று கேட்கிறார். இதன் அடிப்படையில் குஜராத் உயர் நீதிமன்றம் அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கிறது.
2022 மார்ச் முதல் 2023 பிப்ரவரி அந்த தடை நீடிக்கிறது. இதனிடையே இந்த வழக்கை சூரத் நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி மாற்றப்படுகிறார். புதிய நீதிபதி வருகிறார். 2023 பிப்ரவரி 7ம் தேதி ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசும்போது பிரதமர் மற்றும் ஒரு நிறுவனத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் எடுத்துச் சொல்கிறார். அதில் ஏறத்தாழ 90 சதவீதத்தை சபாநாயகர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிடுகிறார்.
7.2.2023 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிறகு, 9 நாட்களில், பூர்ணேஷ் மோடி குஜராத் நீதிமன்றத்திற்கு சென்று தன்னுடைய தடையை நீக்கிவிட்டு வழக்கு விசாரணை நடக்கட்டும் என்று கோருகிறார். இதற்கு குஜராத் உயர் நீதிமன்றமும் அனுமதியளிக்கிறது. இந்த வழக்கின் விசாரணை 21.2.2023 அன்று மீண்டும் தொடங்குகிறது. சரியாக 30 நாட்களுக்குள், 3 வருடம் கிடப்பில் இருந்த வழக்கு, ஒரு வருடம் தடையில் இருந்த வழக்கில் விசாரித்து, 23 மார்ச் அன்று தீர்ப்பளித்து தண்டனை விதித்து, மறுநாள் 24 மார்ச்சில் தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கு 3 வருடங்கள் ஏன் கிடப்பில் இருந்தது? ஒரு வருடம் ஏன் தடை பெற்றார்?” என்று அவர் கூறியுள்ளார். | வாசிக்க > சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராகுல் காந்தியின் ஜாமீன் நீட்டிப்பு