குஜராத்தில் அணு குண்டு வைக்க திட்டம்: என்.ஐ.ஏ. திடுக் தகவல்

புதுடெல்லி,

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் ஒன்று இந்திய முஜாகிதீன் அமைப்பு ஆகும். இதன், இணை நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கல் மற்றும் சக குற்றவாளிகளுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும்படி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள முஸ்லிம்களை வெளியேற்றி விட்டு, அணு குண்டு ஒன்றை நகரில் வைத்து வெடிக்க செய்ய இந்த பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டு உள்ளது என என்.ஐ.ஏ. கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

இந்த தகவல் பட்கல் மற்றும் சக குற்றவாளிகளின் சாட்டிங் தகவல் வழியே தெரிய வந்து உள்ளது என கோர்ட்டும் அதுபற்றிய விசாரணையில் குறிப்பிட்டு உள்ளது. இந்தியாவுக்கு எதிரான போர் தொடுக்கும் வகையில் தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் பட்கல் ஈடுபட்டு வந்து உள்ளார் என்றும் கோர்ட்டு குறிப்பிட்டு உள்ளது.

அந்த சாட்டிங்கில் உள்ள விசயங்களை விரிவாக அலசி ஆராய வேண்டிய தேவை கோர்ட்டுக்கு இல்லை. பல பக்கங்களில் உள்ள சாட்டிங்கை ஒரு சில நிமிட ஆய்வானது தெளிவாக, எடுத்து கூறுகிற விசயம் என்னவெனில், இதற்கு முன்பு பிற பயங்கரவாத செயல்களை செய்வதற்கு, பிற குற்றவாளிகளுடன் பட்கல் தொடர்பு கொண்டதுடன், வருங்காலத்தில், நேபாளத்தில் உள்ள மாவோயிஸ்டுகள் உதவியுடன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரித்து பயங்கரவாத செயல்களை நடத்த திட்டமிட்டு உள்ளதும் தெரிய வருகிறது என கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

பட்கல்லிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் உபகரணங்களில் உள்ள வீடியோ காட்சிகள், ஜிகாத் பெயரில் முஸ்லிம் அல்லாதோரை கொலை செய்யும் விசயங்களை நியாயப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட ஜிகாதி இலக்கியங்களையும் கொண்டு உள்ளது.

தலீபான், அல்-கொய்தா உள்ளிட்டோர் அடங்கிய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வெடிகுண்டுகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் வீடியோக்கள் ஆகியவையும் இருப்பது பெரிய அளவில் பயங்கரவாத செயல்களில் பட்கல் தொடர்பு கொண்டது மட்டுமின்றி, வெடிகுண்டுகளை தயாரிப்பதிலும் தேர்ந்தவராக உள்ளார் என கோர்ட்டு குறிப்பிட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.