கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுந்தர மகாகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன், திருநடன திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 132ம் ஆண்டு பிரம்மோற்சவம் விழா, கடந்த மார்ச் 25ம் தேதியன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பச்சை காளி, பவள காளி நடன வீதியுலா நேற்று நாதஸ்வர மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, கோயில் வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, ஏராளமான பெண்கள் தாய் வீட்டு சீதனமாக தேங்காய், பழங்கள், பூக்கள், பூ மாலைகள் கொண்ட தட்டுக்களை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர்.
தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்த பச்சை காளி, பவள காளியம்மன் கோயில் சன்னதி முன்பு நடனம் புரிய, கூடியிருந்த பக்தர்கள் நான்கு புறமும் சூழ்ந்து நின்று மாலைகள் அணிவித்து காளியம்மனை உற்சாகமாக வரவேற்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இன்று(3ம் தேதி) காலை 6 மணிக்கு காவிரி ராயர் படித்துறையிலிருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரையுடன் பச்சை காளி, பவள காளி பெரிய கடைத்தெரு வீதி வழியாக வீதியுலா காட்சியும், நாளை (4ம் தேதி) காளியம்மன் கோயில் சன்னதி வந்து அமர்தலும், தொடர்ந்து 5ம் தேதி மாலை விடையாற்றியும், 6ம் தேதி காலை மஹன்யாச பூர்வாங்க சுத்தாபிஷேகமும் நடைபெற்று அன்றுடன் விழா நிறைவு பெறுகிறது.
இதேபோல் பாபநாசம் 108 சிவாலயம் வங்காரம்பேட்டை வீரமகாகாளியம்மன் கோயிலில் திருநடன திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி ஹோமம், அக்னி எல்லை வலம் வருதல், கரகம், காவடி, பால்குடம், கஞ்சிவார்த்தல், காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து துர்க்கை அம்மன் எல்லை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. வீர மகாகாளியம்மன் படுகளம் பார்த்து வீதி உலா வந்து திருநடன திருவிழா முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பின்னர் வீரமகாகாளியம்மன் சன்னதியை வந்து அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.