கொச்சி: ஏவுகணைக் கப்பல்களை ரூ. 9,805கோடி மதிப்பில் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கொச்சி ஷிப்யார்டு நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய கடற்படைக்கு உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தை, கேரளாவில் உள்ளகொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் தயாரித்து கொடுத்தது. தற்போது இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்காக 6 அடுத்த தலைமுறை ஏவுகணைக் கப்பல்களை ரூ.9,805 கோடி மதிப்பில் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கொச்சின் ஷிப்யார்டு கையெழுத்திட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அடுத்த தலைமுறை ஏவுகணைக் கப்பல்கள், அதிகளவிலான ஆயுதங்களை உடைய கப்பலாகவும், எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையிலும், அதிக வேகத்தில் சென்றுஎதிரி இலக்குகளை தாக்கும் திறனுடையதாகவும் இருக்கும். கடல்சார் தாக்குதல் நடவடிக்கைகள், தரைஇலக்குகள், எதிரிகளின் போர்க்கப்பல்களை தாக்குவதற்கும் இந்த கப்பல்களை பயன்படுத்த முடியும். இந்த கப்பல்கள் 2027-ம் ஆண்டு மார்ச் முதல் விநியோகிக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கொச்சி ஷிப்யார்டு நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் மாது எஸ் நாயர் கூறுகையில், ‘‘ ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல்களை வெற்றிகரமாக தயாரித்து கொடுத்தபின், அடுத்ததலைமுறை ஏவுகணை கப்பல்களை தயாரிக்க ஆர்வமாக உள்ளோம்’’ என்றார்.
இது தவிர நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அளிக்கும் திறன்வாய்ந்த 8 போர்க் கப்பல்கள் தயாரிக்கும் பணியிலும் கொச்சி ஷிப்யார்டு ஈடுபட்டுள்ளது.