திருவனந்தபுரம் கேரளாவில் ஓடும் ரயிலில் சக பயணியர் மீது, மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்; ஒரு பெண் மற்றும் 2 வயது குழந்தை உட்பட மூன்று பேர் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டனர். இது பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில், சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து கேரள போலீசார் விசாரித்து வருகின்றனர். ரயிலுக்கு தீ வைத்தவர், உத்தர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த ஷாரூக் சைபி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஆலப்புழாவில் இருந்து கண்ணுார் நோக்கி, ‘எக்சிக்யூட்டிவ் எக்ஸ்பிரஸ்’ பயணியர் ரயில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டுஇருந்தது.
தீக்காயம்
ரயில், கோழிக்கோடு சிட்டி ரயில் நிலையத்தை கடந்து, கொரபுழா ரயில்வே பாலத்தில் சென்ற போது, ரயிலின் முன்பதிவு இல்லாத, டி – 1 பெட்டியில் இருந்த பயணி ஒருவர், பாட்டிலில் இருந்த பெட்ரோலை சக பயணியர் மீது ஊற்றி தீ வைத்தார்.
ரயிலில் ஆங்காங்கே தீ பரவியதுடன், பயணியர் சிலர் மீதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் பயந்து போன பயணியர் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேருக்கு தீ காயங்கள் ஏற்பட்டன.
ரயில் தீ பற்றி எரிந்ததும், பயணியர் சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். அப்போது, குற்றவாளி ரயிலில் இருந்து இறங்கி தப்பியதாக கூறப்படுகிறது.
பின் அடுத்து வந்த கோயிலாண்டி ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் சிலருக்கு 50 சதவீத தீ காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
கண்ணுார் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்ததும், உடன் வந்த மனைவி ரஹ்மத் மணிகோத், 45, மற்றும் மனைவியின் சகோதரி மகள் சஹாரா பதுல், 2, ஆகியோரை காணவில்லை என, சராபுதீன் என்ற பயணி கூறினார்.
ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட பின், ரயில் வந்த பாதையில் போலீசார் தேடினர். நான்கு மணி நேர தேடுதலுக்கு பின், கோழிக்கோட்டின் எலாத்துார் ரயில் நிலையம் அருகே, 2 வயது குழந்தை சஹாரா மற்றும் ரஹ்மத் உட்பட மூன்று உடல்களை போலீசார் கைப்பற்றினர்.
மூன்றாவது சடலம், மீன் வியாபாரம் செய்யும், நவுபீக், 40, என்பவரின் உடல் என தெரியவந்தது. ரயிலில் தீ பற்றி எரிந்தவுடன், இவர்கள் பயத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் அல்லது தப்பிக்க முயன்று விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
மூன்று உடல்களிலும் தீக்காயம் எதுவும் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணை
குற்றவாளி இறங்கி ஓடிய பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.
அதில் ஒரு காட்சியில், 25 வயது மதிக்கத்தக்க சிவப்பு டி – ஷர்ட் அணிந்த நபர், ‘மொபைல் போனில்’ யாருடனோ பேசுகிறார். சிறிது நேரத்தில், அவர் இரு சக்கர வாகனத்தில் வந்த நபருடன் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
சம்பவ இடத்தில் இருந்து குற்றவாளியின் பையை போலீசார் கைப்பற்றினர். அதில், ஒரு பாட்டில் பெட்ரோல், ‘மொபைல் போன்’, டைரி, டிபன் பாக்சில் சப்பாத்தி மற்றும் சில தின்பண்டங்கள் இருந்தன.
அந்த டைரியில், கன்னியாகுமரி உட்பட பல முக்கிய ரயில் நிலையங்களின் பெயர்கள் ஹிந்தியில் எழுதப்பட்டு இருந்தன. மேலும், சில தேதிகள் மற்றும் கணக்கு வழக்குகள் எழுதப்பட்டு இருந்தன. இதன் வாயிலாக, குற்றவாளி வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற முதல் துப்பு கிடைத்தது.
இது குறித்து, கேரள டி.ஜி.பி., அனில் காந்த் கூறியதாவது:
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது பயங்கரவாதிகள் அல்லது நக்சலைட்களின் சதி செயலா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
எங்களுக்கு சில தடயங்கள் கிடைத்துள்ளன. அவற்றை வைத்து அறிவியல்பூர்வமான விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளியை விரைவில் பிடித்துவிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குற்றவாளியை பலர் நேருக்கு நேராக பார்த்துள்ளதால் அவர்களது உதவியுடன், குற்றவாளியின் முகம் வரை படமாக வரையப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த ஷாரூக் சைபி என்பவர் தான் ரயிலில் தீ வைத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக, அவரது புகைப்படத்தை போலீசார் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.