கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் செல்லும் எக்சிக்யூட்டிவ் ரயில் நேற்று இரவு 9.30 மணியளவில் எலத்தூர் ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு மெல்ல புறப்பட்டது. அப்போது டி2 கம்பார்ட்மெண்டில் இருந்து டி1 கம்பார்ட்மெண்டுக்கு கையில் இரண்டு பெட்ரோல் பாட்டில்களுடன் ஒருவர் வந்துள்ளார். திடீரென பாட்டிலை திறந்து பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். பயணிகள் அலறியபடி பக்கத்து பெட்டிகளுக்கு ஓடினர். அப்போது ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்.
ரயில் கோரப்புழா பாலத்துக்கு மேல் நிறுத்தப்பட்ட நிலையில் பயணிகள் வெளியே இறங்க முடியாமல் தவித்தனர். மீட்புப்பணிக்காக அங்கு வந்தவர்கள் ரயிலை முன்பக்கம் இயக்கச் செய்தனர். ரயில் பாலத்தை கடந்து ரோடு அமைந்துள்ள பகுதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து காயம் ஏற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். இதற்கிடையே தீ வைத்த நபர் ரயிலில் இருந்து வெளியே குதித்து ஒருவரின் பைக் மூலம் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகள் யாரும் மரணமடையவில்லை என முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில் தீ வைத்து எரிக்கப்பட்ட பகுதியில் ரயில் தண்டவாளத்தில் 2 வயது பெண் குழந்தை உள்பட மூன்றுபேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தது கோழிக்கோடு சாலியம் பகுதியைச் சேர்ந்த சுஹைப் – ஜசீலா தம்பதியின் மகள் ஸஹ்லா(2), ஜசீலாவின் சகோதரியான கண்ணூர் மட்டனூரைச் சேர்ந்த ரபத்(45), மட்டனூரைச் சேர்ந்த நெளபீக் ஆகியோர் என அடையாளம் காணப்படுள்ளது. கண்ணூருக்குச் சென்ற ரயிலின் டி 1 , டி2 கம்பார்ட்மெண்ட்கள் சீல் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரயில் பயணியான லதீஷ் கூறுகையில், “நாங்கள் டி1 கோச்சில் பயணித்தோம். அப்போது ரயிலில் சிவப்பு நிற சட்டை அணிந்த ஒருவர், கையில் இரண்டு பெட்ரோல் பாட்டில்களுடன் வந்தார். வந்தவர், அங்கு நின்று பாட்டிலை திறந்தார். ஒருவேளை தற்கொலை செய்ய வந்திருக்கலாம் என நினைத்தேன். எப்படியும் கம்பார்ட்மெண்ட் எரிந்துவிடும் என்பதை உணர்ந்து நான் டி 2 கம்பார்ட்மெண்டுக்கு ஓடினேன். அதற்குள் அவர் பெட்ரோலை அங்குள்ள பயணிகள் மீது ஊற்றினார். எனது தலையிலும், சட்டையிலும் பெட்ரோல் பட்டது. தொடர்ந்து அவர் தீ வைத்துவிட்டார்.

எனது தலையில் லேசாக தீ பட்டது. அதை கையால் தட்டி அணைத்தேன். என் அருகில் இருந்த ஜோதீந்திரநாத் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் ஓடிவந்தார். அந்த கம்பார்ட்மெண்ட் முழுவதும் தீ படர்ந்தது. பலர் ஓடி தப்பினர். தீ-க்கு பயந்து ஓடும்போது குதித்ததில் மூன்றுபேர் இறந்திருக்கலாம்” என்றார் அதிர்ச்சி மாறாமல்.

இதற்கிடையே தி விபத்து நடந்த பகுதியின் அருகே ஒரு பேக் கண்டு பிடிக்கப்படுள்ளது. அதில் இரண்டு மொபைல்போன்கள். ஒரு பாட்டிலில் பெட்ரோல் போன்ற திரவமும் இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியில் எழுதப்பட்ட சில புத்தகங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. எலத்தூர் பகுயில் ஒருவர் பைக்கில் ஏறி தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், தீ வைத்தவர்கள் யார், எதற்காக தீ வைத்தார்கள் என்பது குறித்த இன்னும் தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.