ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு சென்றுக்கொண்டிருந்தது. இரண்டு பாட்டில் பெட்ரோல் உடன் ரயிலின் உள்ளே புகுந்த மர்ம நபர் D1 கோச்சில் பயணம் செய்த பெண் உட்பட பயணிகளின் மீது திடீரென பெட்ரோல் ஊற்றிய பின் தீ பற்ற வைத்துள்ளார். இதனை பார்த்த ரயிலில் பயணிகள் அபாய சங்கிலி இழுத்து ரயிலை நிறுத்திய நேரத்தில் ரயிலில் இருந்து அந்த நபர் வெளியே குதித்து தப்பி ஓடி உள்ளதாக பயணிகள் கூறி உள்ளனர்.
தீ படர்ந்து பற்றி எரிவதை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த செய்தனர். தொடர்ந்து ரயில்வே போலீசார் மற்றும் எலத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொது மக்கள் தீ காயம் அடைந்த பயணிகளை 8 பேரை மீட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தலை மறைவான மர்ம நபரை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த பயணிகளை மீட்டு கோழிக்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் ரயிலில் பயணம் செய்த பயணிகள் விவரங்களை சரி செய்தபோது 3 பேர் காணாமல் போனது தெரிய வந்தது. உடனடியாக ரயில் வந்த பாதையில் தேடிய போது ஒரு ஆண், பெண், குழந்தையின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது. ரயிலில் தீ பிடிக்கும் எனப் பயந்து அந்த மூவரும் ரயிலில் இருந்து குதித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் தவ்ஃபீக், மற்றொருவர் ரெஹானா என அடையாளம் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்த ஒன்றாக போலீசார் சந்தேகிக்கின்றனர். காரணம் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பி பைக் ஒன்றில் ஏறிச் சென்றதாக பயணி ஒருவர் போலீசில் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த பைக் கோழிக்கோடு கூராச்சுண்டை சேர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. அதேசமயம் இலத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கேட்பாரற்று பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் பெட்ரோல் பாட்டில், துண்டு பிரசுரம், மொபைல் ஃபோன், துணி ஆகிய பொருட்கள் இருந்துள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன் எதிரே அமர்ந்திருந்த பயணியின் மீது ஏதோ ஸ்ப்ரேயர் மூலம் ஸ்ப்ரே செய்தார். நாங்கள் என்ன நடக்கிறது என ஊகிக்கும் முன்னர் அவர் அந்த நபர் மீது தீவைத்துவிட்டு தப்பிவிட்டார்” என்றனர்.
இந்நிலையில், கேரளா ரயிலில் தீ வைத்தவர்கள் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.